சென்னை: போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் ரிப்பன் மாளிகை எதிரே புதிய ‘யு’ திருப்பம் அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை போக்குவரத்து போலீஸார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகை அருகே ஈவிஆர் சாலையில் பெருகிவரும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க வேண்டி ஈ.வி.ஆர் சாலை – பிஎல்சி சந்திப்பு அருகில் புதியதாக `யு’ திருப்பம் நேற்று (அக். 9) மதியம் 3 மணி முதல் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது ராஜா முத்தையா சாலையிலிருந்து பிஎல்சி சந்திப்புக்கு வரும் வாகனங்கள் பிஎல்சி சந்திப்பில் வலதுபுறம் திரும்பி காந்தி இர்வின் சந்திப்பு நோக்கிச் செல்ல அனுமதிக்கப்படுவதால், ஈவிஆர் சாலையில் உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் காலை, மாலை நேரங்களில் இப்பகுதி சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இந்த நெரிசலைக் குறைக்க வேண்டி தற்போது பிஎல்சி சிக்னல் அருகே ரிப்பன் மாளிகை எதிரில் புதியாக `யு’ திருப்பம் அமைக்கப் பெற்று ராஜா முத்தையா சாலையிலிருந்து பிஎல்சி சந்திப்புக்கு வரும் வாகனங்கள் பிஎல்சி சந்திப்பில் வலதுபுறம் திரும்ப அனுமதிக்கப்படாமல் மேற்கண்ட புதியதாக அமைக்கப்பட்ட `யு’ திருப்பத்தில் அனுமதிக்கப்பட்டு காந்தி இர்வின் சாலை சந்திப்பு நோக்கிச் செல்லலாம். இந்த போக்குவரத்து மாற்றத்தால் வாகன போக்குவரத்து தங்குதடையின்றிச் செல்லும். இவ்வாறு போக்குவரத்து போலீஸார் தெரிவித்துள்ளனர்.