டெல்லியில் உள்ள தல்லுபுரா என்ற இடத்தில் வசித்து வந்தவர் பவன். இவர் தனது நண்பரிடம் இருந்த துப்பாக்கியைப் பயன்படுத்தி ரீல்ஸ் எடுக்க முடிவு செய்தார். இதற்காக பவன் துப்பாக்கியை கையில் எடுத்து அதற்கு தோட்டா நிரப்புவது போன்ற வேலையில் ஈடுபட்டார்.
அவரது நண்பர் இந்தக் காட்சியை வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது பவன் துப்பாக்கியைத் தனது நெஞ்சில் வைத்தார். அதோடு சுடும் டிரிக்கரில் தனது கைவிரல்களை வைத்தார். உடனே வீடியோ எடுத்த நபர் சுட்டுவிடாதே என்று எச்சரித்தார்.
அந்நேரம் பவன் தனது நெஞ்சில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு சிரித்தபடி லேசாக டிரிக்கரை அழுத்தினார். அடுத்த நொடியே துப்பாக்கியிலிருந்த தோட்டா பவன் நெஞ்சில் பாய்ந்தது.
இதில் பவன் அப்படியே சரிந்து விழுந்தார். உடனே அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள் இறந்துபோனார்.
துப்பாக்கிக்கு லைசென்ஸ் இருக்கிறது. வீடியோ எடுத்தவர் பெயரில்தான் துப்பாக்கி இருக்கிறது. இது குறித்து போலீஸார் கூறுகையில், “‘ரீல்ஸ் எடுத்துக்கொண்டிருந்தபோது துப்பாக்கி லாக் செய்யப்பட்டு இருப்பதாக நினைத்துக்கொண்டு டிரிக்கரை பவன் அழுத்திவிட்டார். ஆனால் துப்பாக்கி லாக் செய்யப்படாமல் இருந்துள்ளது. இதனால் பவன் மீது தோட்டா பாய்ந்து இறந்துவிட்டார்” என்று தெரிவித்தனர்.
ரீல்ஸ் எடுக்க நினைத்த வாலிபர் பரிதாபமாக தனது உயிரை இழந்துள்ளார்.