அவரிடம் விசாரித்தபோது, கணேஷ் சவான் ஒரு கோடி ரூபாய்க்கு இன்சூரன்ஸ் எடுத்திருந்தது தெரிய வந்தது. அதோடு, அவரது வீட்டுக் கடனை அடைக்க பணம் தேவைப்பட்டதால், இந்தக் கொலை நாடகத்தை நடத்த முடிவு செய்தார்.
யாரையாவது கொலை செய்து எரித்துவிட்டு, அதை தனது சொந்த கொலை போல நாடகம் நடத்த திட்டமிட்டார். இதற்காக காரை எடுத்துக்கொண்டு யாராவது சிக்குவார்களா என்று பார்த்துக்கொண்டே சென்றார்.
குடிகாரருக்கு லிப்ட் கொடுத்து கொன்ற சவான்
வழியில் துல்ஜாபூரைச் சேர்ந்த கோவிந்த் யாதவ் என்பவர் குடிபோதையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அவரிடம் லிப்ட் கொடுப்பதாக கணேஷ் சவான் தெரிவித்தார். உடனே கோவிந்த் யாதவ் கணேஷின் காரில் ஏறிக்கொண்டார்.
காரை உணவகம் ஒன்றில் நிறுத்தி உணவு வாங்கிக்கொண்டு, மீண்டும் காரில் பயணம் செய்தனர். குறிப்பிட்ட ஒரு இடத்தில் காரை நிறுத்திவிட்டு சாப்பிட்டனர். சாப்பிட்டு முடித்தவுடன், கோவிந்த் அப்படியே காரில் உறங்கிவிட்டார். அதோடு, அவர் குடிபோதையிலும் இருந்தார்.

இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட கணேஷ், கோவிந்தை டிரைவர் இருக்கையில் அமரவைத்து, சீட் பெல்ட் அணிவித்தார். கார் இருக்கையில் பிளாஸ்டிக் பைகளையும் வைத்திருந்தார். பின்னர் காருக்கு தீ வைத்துவிட்டு தப்பிச்சென்றுவிட்டார்.
தான் இறந்துவிட்டதாக போலீஸாரையும், தனது குடும்பத்தினரையும் நம்ப வைக்க, தனது கைச்செயினை கோவிந்த் அருகில் போட்டு விட்டுச் சென்றார் என்று கூறினார்.
கணேஷ் சவான் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.