ரூ.1.10 கோடி மானநஷ்ட ஈடு கோரி இபிஎஸ் தொடர்ந்த வழக்கு: அறப்போர் இயக்கம் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு | High Court Orders Arappor Iyakkam to Respond on EPS Defamation Case

1373715
Spread the love

சென்னை: ரூ.1.10 கோடி மானநஷ்ட ஈடு கோரி, அறப்போர் இயக்கத்துக்கு எதிராக தொடர்ந்த வழக்கில், தனது வாக்குமூலத்தை பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்கக் கோரி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவுக்கு அறப்போர் இயக்கம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016- 21ம் ஆண்டுகளில், அதிமுக ஆட்சியில் தஞ்சாவூர், சிவகங்கை, கோவை மாவட்டங்களின் நெடுஞ்சாலை டெண்டர் ஒதுக்கீட்டில், அரசுக்கு 692 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தி முறைகேடு செய்துள்ளதாக நெடுஞ்சாலைத் துறையை கட்டுப்பாட்டில் வைத்திருந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அறப்போர் இயக்கத்தின் சார்பில், தலைமை செயலர், நெடுஞ்சாலை துறை, லஞ்ச ஒழிப்புத் துறை ஆகியவற்றிடம் ஜூலை 22ம் தேதி புகார் அளிக்கப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக அறப்போர் இயக்கம் சமூக வலைதளங்களில் செய்தி வெளியிட்டு இருந்தது.

இது தனக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதுடன், மன உளைச்சலும் ஏற்படுத்தியுள்ளதாக கூறி, மான நஷ்ட ஈடாக ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கும்படி அறப்போர் இயக்கம், அதன் ஒருங்கிணைப்பாள ஜெயராம் வெங்கடெஷ், இணை ஒருங்கிணைப்பாளர் ஜாகிர் உசேன் ஆகியோருக்கு எதிராக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி கே.குமரேஷ் பாபு முன்பு விசாரணைக்கு வந்தபோது, எடப்பாடி பழனிசாமி தரப்பில், வழக்கில் தனது சாட்சியத்தை பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்கக் கோரி, எடப்பாடி பழனிசாமி தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், முன்னாள் முதல்வர் என்பதால் நேரில் வந்து சாட்சியம் அளிக்க முடியாது. அதனால், வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டும் என தெரிவிக்கபட்டிருந்தது. இந்த மனுவுக்கு அறப்போர் இயக்கம் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஆகஸ்ட் 25ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *