உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத் நகரில் ரூ. 1.37 கோடி இணைய மோசடியில் ஈடுபட்ட தாய் – மகன் இருவரையும் ஒடிசா காவல்துறையினர் கைது செய்தனர்.
ஒடிசாவின் புவனேஷ்வர் நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பொதுப் பணித்துறை பொறியாளர் ஒருவருக்கு கடந்த மே 22 அன்று வேறுவேறு மொபைல் எண்களில் இருந்து தொடர்ந்து அழைப்பு வந்துள்ளது.
அந்த அழைப்புகளில் சைபர் கிரைம் காவல்துறையினர் என்றும் ஃபெட் எக்ஸ் கொரியர் நிறுவன ஊழியர்கள் என்றும் மோசடி செய்யும் நபர்கள் பேசியுள்ளனர்.
மேலும், அந்த நபரிடம் அவரது ஆதார் எண் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டதாகவும், அந்த ஆவணம் பணமோசடிக்கு ஈடுபடுத்தப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிக்க | மன்மோகன் சிங்கை மத்திய அரசு அவமதித்துவிட்டது: இறுதிச்சடங்கு விவகாரத்தில் ராகுல் குற்றச்சாட்டு!
பாதிக்கப்பட்டவரின் பெயரில் கிரிமினல் வழக்கு பதியப்பட்டதால் அவருக்கு 3 முதல் 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என்று தெரிவித்த அந்த நபர்கள், அவருடைய வங்கிக் கணக்கில் உள்ள பணம் முழுவதையும் சோதனை செய்வதற்காக தங்களது கணக்கிற்கு அனுப்புமாறு கூறியுள்ளனர். விசாரணை முடிந்ததும் மீண்டும் பணத்தைத் திருப்பி அனுப்புவதாகும் தெரிவித்துள்ளனர்.
இதனால் அச்சமடைந்த அவர் தனது வங்கிக் கணக்கு மற்றும் தனது மனைவியின் கணக்கில் இருந்த மொத்த பணமான ரூ. 1.37 கோடியை கடந்த மே 14, 18 தேதிகளில் மோசடியில் ஈடுபட்ட நபர்களின் வங்கிக் கணக்குகளுக்கு ஐந்து பரிவர்த்தனைகள் மூலம் மாற்றியுள்ளார்.
விசாரணையில், பாதிக்கப்பட்ட நபர் 3 வங்கிக் கணக்குகளுக்கு பணத்தை அனுப்பியதும், அதில் ரூ. 1.12 கோடி வன்ஷ்நீல் மென்பொருள் நிறுவனத்தின் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அந்த நிறுவனம் குறித்து விசாரித்தபோது தாய், மகன் இருவரும் நடத்தும் அந்த நிறுவனத்திற்கு உரிமையாளர்கள் வன்ஷ், நீல் ஆகியோர் என்பதை காவல்துறையினர் உறுதி செய்தனர்.
இந்த நிலையில், உத்தரப் பிரதேசத்தில் வைத்து இருவரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களை ஒடிசா அழைத்து வந்தனர்.
இதையும் படிக்க | ரூ.6 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்!
இருவரும் இணைந்து பணமோசடி செய்வதற்காக உத்தரப் பிரதேசத்தின் மீரட் நகரில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி, ஸ்டேட் வங்கி ஆகிய வங்கிகளின் வெவ்வேறு கிளைகளில் 13 வங்கிக் கணக்குகளைத் தொடங்கியிருந்தனர்.
ஏற்கனவே ஒருமுறை டிஜிட்டல் கைது மோசடி விவகாரத்தில் ரூ. 63 லட்சம் மோசடி செய்ததாக தில்லியில் உள்ள சைபர் காவல்துறையால் இருவரும் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தாயும் மகனும் இணைந்து நாடு முழுவதும் 15க்கும் மேற்பட்ட இணைய மோசடியில் ஈடுபட்டிருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.