ரூ.11 கோடியில் புதுப்பிக்கப்பட்ட சென்னை – அண்ணா மேம்பாலம்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார் | Chief Minister Stalin inaugurated the renovated Anna Bridge at chennai

1289261.jpg
Spread the love

சென்னை: பொன்விழாவை முன்னிட்டு ரூ.10.85 கோடியில் புதுப்பிக்கப்பட்ட சென்னை அண்ணா மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை மாலை திறந்து வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: “தமிழகத்தின் முதல் சாலை மேம்பாலமான அண்ணா மேம்பாலம் கடந்த 1969-ல் முதல்வராக மு.கருணாநிதி பொறுப்பேற்ற பின் திட்டமிடப்பட்டு, வடிவமைத்து கட்டப்பட்ட மிகப்பெரிய மேம்பாலமாகும். கடந்த 1970-ம் ஆண்டு அப்போதைய சென்னை மாநகரில் ஜெமினி ஸ்டுடியோ அமைந்திருந்த அந்தப் பகுதியில் நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலை, ராதாகிருஷ்ணன் சாலை, தேனாம்பேட்டை சாலை, ஜி.என்.ஷெட்டி சாலை ஆகிய சாலைகள் சந்திக்கும் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. அந்த நெரிசலை நீக்கி அப்பகுதியில் சுகமான சாலைப் போக்குவரத்தை உறுதிப்படுத்தும் வகையில் அண்ணா மேம்பாலம் கட்டப்பட்டது.

அப்போது ரூ.66 லட்சம் ரூபாய்ச் செலவில் கட்டப்பட்ட பாலத்தை, 1973 ஜூலை 1-ம் தேதி கருணாநிதி திறந்து வைத்தார். சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை மட்டுமே கருத்தில் கொண்டு சென்னை மாநகரில் சாலை சந்திப்பில் முதன் முதலாகக் கட்டப்பட்ட மேம்பாலம் இது. ஜெமினி ஸ்டுடியோ அப்பகுதியில் அமைந்திருந்ததையொட்டி அப்பாலத்தைக் குறிப்பிடும்போது, “ஜெமினி மேம்பாலம்” என்று கூறப்பட்டது. ஆனால், அன்றைய நிலையில் நாட்டிலேயே 3-வது பெரிய மேம்பாலமான அதற்கு “அண்ணா மேம்பாலம்” என கருணாநிதி பெயர் சூட்டினார்.

இந்நிலையில், அண்ணா மேம்பாலம் கட்டப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்து பொன்விழா காணும் நிலையில் அதை புதுப்பிக்க அரசின் சார்பில் ரூ.8.85 கோடியை முதல்வர் முக..ஸ்டாலின் ஒதுக்கினார். மேலும், ஆயிரம் விளக்கு உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.2 கோடி பெறப்பட்டு, ரூ.10.85 கோடியில் அண்ணா மேம்பாலம் புதுப்பிக்கப்பட்டு வண்ண விளக்குகள் ஒளிர அழகு படுத்தப்பட்டுள்ளது.

இதில் பாலத்தின் தூண்கள் GRC பேனல்கள் கொண்டு மறுசீரமைக்கப்பட்டுள்ளன. பாலத்தின் கீழ் அழகூட்டும் வகையில் பசுமையான செடிகள் ஒளிரும் மின்விளக்குகள், மக்கள் நடந்து செல்ல ஏதுவாக நடைபாதை, செயற்கை நீருற்று ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.மேலும், திராவிட கட்டடக் கலையைப் பறைசாற்றும் வகையில் பாலத்தின் முகப்பில் உள்ள தூண்கள், பூங்கா பகுதியில் யாழி சிற்பங்கள், முக்கோண ஸ்தூபிகள், பித்தளைப் பலகையில் பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள் பொறிக்கப்பட்டுள்ளன.

பொன்விழா ஆண்டை முன்னிட்டு புதுப்பொலிவுடன் புனரமைக்கப்பட்டுள்ள அண்ணா மேம்பாலத்தை வெள்ளிக்கிழமை மாலை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன்,பி.கே.சேகர் பாபு, மேயர் ஆர்.பிரியா, தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா, மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், நெடுஞ்சாலைத்துறை செயலர் ஆர். செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *