சென்னை: தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சட்டப்பேரவையில் 2025-26 காவல் துறை மானியக் கோரிக்கையில், மகளிர் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 80 இளஞ்சிவப்பு (பிங்க்) ரோந்து வாகனங்கள் போலீஸாருக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, மாநகர போலீஸாரின் பயன்பாட்டுக்காக 80 இளஞ்சிவப்பு ரோந்து வாகனங்கள் ரூ.12 கோடி செலவில் கொள்முதல் செய்யப்பட்டன. அவற்றின் பயன்பாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
இவை தாம்பரம், ஆவடி, சேலம், கோவை, திருப்பூர், திருச்சி, நெல்லை, மதுரை மாநகரங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் ரோந்துப் பணி மேற்கொண்டு, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும். நிகழ்வில், தலைமைச் செயலர் நா.முருகானந்தம், உள்துறைச் செயலர் தீரஜ்குமார், டிஜிபி க.வெங்கடராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.