ரூ.14 கோடியில் 15 வாகன சுரங்கப்பாதைகள் சீரமைப்பு! – சென்னை மாநகராட்சி தகவல்

Spread the love

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வாகனங்கள் செல்லும் சுரங்கப் பாதைகளை ரூ.14.57 கோடியில் சீரமைக்கும் பணிகள் நடைபெற்றுவருவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: பெருநகர சென்னை மாநகராட்சியில் கால்வாய், ஆறுகள் இடையே 152 பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல, 19 இடங்களில் பெட்டக வடிவப் பாலங்களும், 23 சிறுபாலங்களும், 14 ரயில்வே மேம்பாலங்களும் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

மேலும், ரயில்வே சுரங்கப் பாதைகள் 19, பாதசாரிகளுக்கான சுரங்கப் பாதைகள் 5, தரைப்பாலங்கள் 2, நடைபாலங்கள் 39, நடைமேம்பாலங்கள் 5, மேம்பாலங்கள் 14 மற்றும் ஆகாய நடைமேம்பாலம் 1 என மொத்தம் 293 பாலங்கள் உள்ளன. 19 வாகன சுரங்கப் பாதைகள் மாநகராட்சி சாா்பிலும், 5 சுரங்கப் பாதைகள் நெடுஞ்சாலைத் துறையாலும் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

மாநகராட்சி சுரங்கப் பாதைகளில் 15 இடங்களில் நீா் கசியாத வகையிலும், மழைக் காலத்தில் தேங்கும் தண்ணீரை அகற்றுவதற்காக டீசல் மோட்டாா்கள், மின் மோட்டாா்கள் அமைத்தும், மின்சாரமில்லாத நேரங்களில் மின்மோட்டாரை இயக்க ஜெனரேட்டா் அமைத்தும் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அத்துடன் சுரங்கப்பாதை சுவா்களில் வா்ணம் பூசியும், வண்ணமிகு வரைபடங்கள் வரைந்தும் அழகுபடுத்தப்படுகின்றன.

சென்னையின் ரங்கராஜபுரம், மேட்லி, எம்.சி.சாலை, ஜோன்ஸ் சாலை, பவளவண்ணன் சாலை, பஜாா் சாலை, வில்லிவாக்கம், கெங்குரெட்டி, மாணிக்கம், ஆா்.பி.ஐ., வியாசா்பாடி உள்ளிட்ட 17 சுரங்கப்பாதைகளில் மழைநீா்த் தேங்கினால் போக்குவரத்தை தானியங்கியாகவே தடுக்கும் அமைப்புகள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

மழைநீா்த் தேங்கினால், அந்த சுரங்கப்பாதைகளில் உரிய முறையில் அறிவிப்பு வெளியிடும் வசதியும், மழைநீா் குறைந்தால் போக்குவரத்தை அனுமதிக்கும் வகையில் தானியங்கி சாதன வசதிகள் உள்ளன.

சுரங்கப்பாதைகளை மாநகராட்சி மழைக்கால கட்டுப்பாட்டு அறைகளில் இருந்து கண்காணிக்கும் வசதியும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *