ஆரம்பத்தில் இந்த ஓவியத்தின் மதிப்பு ரூ.80 முதல் ரூ.120 கோடி வரை இருக்கும் என கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஏலத்தின் முடிவில் அது இருமடங்கு அதிக விலைக்கு விற்பனையாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஓவியத்தை வாங்கியது குறித்துப் பேசிய பூனாவாலா, “இது ஒரு தேசியப் பொக்கிஷம். இதனை என் வசம் வைத்திருப்பதை ஒரு பொறுப்பாகவே கருதுகிறேன். பொதுமக்கள் இந்த ஓவியத்தை அவ்வப்போது பார்வையிடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதே எனது நோக்கம்” என்று பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
ஓவியத்தின் சிறப்பு:
1890-களில், ரவிவர்மா தனது கலைத்திறனின் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் இந்த ஓவியம் வரையப்பட்டது. யசோதையின் தூய்மையான தாய்மையின் அன்பையும், குழந்தை கிருஷ்ணனின் வசீகரத்தையும் இதிகாசப் பின்னணியில் மிகத் தத்ரூபமாக ரவிவர்மா இதில் வெளிப்படுத்தியுள்ளார்.
இன்று இந்தியர்கள் பலரும் தங்களின் மனதில் சரஸ்வதி, லட்சுமி, ராமர், கிருஷ்ணர் போன்ற தெய்வங்களை எப்படி உருவகப்படுத்தி வணங்குகிறார்களோ, அந்த அழகிய உருவங்களை வடிவமைத்து மக்களின் மனதில் ஆழமாகப் பதியவைத்த பெருமை ரவிவர்மாவையே சேரும்.