ரூ.2.85 கோடியில் ‘முதல்வர் படைப்பகம்’ – சென்னை கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் | Muthalvar Padaippagam in chennai

1335673.jpg
Spread the love

சென்னை: தமிழக அரசு சார்பில் சென்னை கொளத்தூரில் ரூ.2.85 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள ‘முதல்வர் படைப்பகம்’ என்ற பகிர்ந்த பணியிட மையத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் குறைந்த கட்டணத்தில் படிக்கும் சூழலை ஏற்படுத்தவும், புத்தொழில் தொடங்குவோர் குறைந்த கட்டணத்தில் தங்கள் அலுவலகமாக பயன்படுத்திக் கொள்ளவும், முதல்வரின் தொகுதியான கொளத்தூர் ஜெகந்நாதன் தெருவில் ‘முதல்வர் படைப்பகம்’ என்ற பகிர்ந்த பணியிட மையம் (Co-working Space) அமைக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு சார்பில் வடசென்னை வளர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ.2.85 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார். இந்த கட்டிடம் தரை தளம் மற்றும் 2 தளங்களை கொண்டுள்ளது. அனைத்து தளங்களிலும் ஏசி வசதி செய்யப்பட்டுள்ளது. வைஃபை வசதியும் இலவசமாக வழங்கப்படுகிறது. தரை தளத்தில் ‘பகிர்ந்த பணியிட சேவை’ வழங்கப்படுகிறது. இங்கு மென்பொருள் உள்ளிட்ட துறைகளை சேர்ந்த நிறுவனம் நடத்துவோர் 38 பேர் பணியாற்றும் வகையில் இருக்கைகள், மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. 4 மற்றும் 6 இருக்கைகள் கொண்ட 3 ஆலோசனை கூடங்கள் உள்ளன. 6 பேர் அமரும் வகையில் சோபா இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. பகிர்ந்த பணியிடத்தை ஒரு நபர் அரை நாள் பயன்படுத்த ரூ.50, முழு நாளுக்கு ரூ.100, மாதம் முழுவதும் பணியாற்ற ரூ.2,500 கட்டணம்.

முதல் தளம் கல்வி மையமாக செயல்படுகிறது. இங்கு ஒரே நேரத்தில் 51 பேர் அமர்ந்து படிக்கும் வகையில் வசதிகள் உள்ளன. இதற்கு இரண்டரை மணி நேரத்துக்கு ரூ.5 கட்டணம். இங்கு டிஎன்பிஎஸ்சி, யுபிஎஸ்சி, ஆர்ஆர்பி, நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கான நூல்கள் கிடைக்கும். மாணவர்களிடம் லேப்டாப் இருந்தால், அதையும் இங்கு கொண்டு வந்து பயன்படுத்தலாம். இணையத்தில் தகவல் தேட வசதியாக 3 கணினிகளும் நிறுவப்பட்டுள்ளன. 2-ம் தளம் தேநீர், உணவு அருந்தும் கூடமாகும். இங்கேயே உணவு சமைத்து விற்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட சேவைகளை பயன்படுத்த விரும்புவோர் https://gccservices.chennaicorporation.gov.in/muthalvarpadaippagam என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். 100 சதவீதம் இணையவழி பதிவு மட்டுமே ஏற்கப்படும். கொளத்தூர் தொகுதியை சேர்ந்த புத்தொழில் நிறுவனத்தினர், மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அடிமட்டத்தில் இருந்து முன்னேறி வரும் புத்தொழில் நிறுவனத்தினருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். பெரிய நிறுவனத்தினர் பணியாற்ற அனுமதி இல்லை. இந்த மையம் காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை திறந்திருக்கும் என்று மையத்தின் நிர்வாகிகள் கூறினர்.

திறப்பு விழா நாளான நேற்றே இணைய வழியில் முன்பதிவு செய்து, இந்த மையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த மெவ்டெரோ டெக் சர்வீசஸ் (Mavdero Tech Services) என்ற நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) ஆர்.ஜெ.மதன் கூறியதாவது: நான் கொளத்தூர் பகுதியை சேர்ந்தவன். இதுவரை வீட்டில் இருந்தபடி பணியாற்றினேன். சில நேரம் இதுபோன்ற சேவை வழங்கும் தனியார் இடத்துக்கு சென்று பணியாற்றி வருகிறேன். தனியாரைவிட இங்கு கட்டணம் பல மடங்கு குறைவு. ஏசி வசதி, வைஃபை இணைய சேவை வேகம், முதுகுவலி ஏற்படுத்தாத இருக்கை, போதிய இடைவெளியில் மேஜைகள் என அனைத்தும் சிறப்பாக உள்ளன. போக்குவரத்துக்கு இனிமேல் அதிக நேரம் செலவிட தேவையில்லை. என் சொந்த அலுவலகத்தில் பணியாற்றுவது போன்ற உணர்வு ஏற்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

கல்வி மையத்தில் சி.ஏ. தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்த மாணவர் எம்.சஞ்சய் கூறும்போது, ‘‘வீட்டில் பல்வேறு இடையூறுகள் இருப்பதால் நிம்மதியாக படிக்க முடிவதில்லை. இங்கு அமைதியான சூழல், இலவச வைஃபை வசதி, கணினி வசதி, ஏசி வசதி, இருக்கை வசதி என அனைத்தும் இரண்டரை மணி நேரத்துக்கு வெறும் 5 ரூபாய் கட்டணத்தில் கிடைப்பது பெரிய வரப்பிரசாதம்’’ என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *