இன்று தொடுதிரையில் கணநேரத்தில் நாட்டு நடப்புகளை அறிகிறோம். தலைவர்கள் சமுக வலைதளம் மூலம் உடனுக்குடன் மக்களிடம் பேசுகிறார்கள். அனால் நாம் கடந்து வந்த தேர்தல் பாதை இத்தனை எளிதானதன்று! திண்ணை பிரசாரம், தெருமுனை கூட்டங்கள், ரேடியோ, தொலைக்காட்சி, சமுக வலைதளம் என கடந்து வந்த பாதையும், கட்சிகள் அவற்றை திறம்பட கையாண்ட விதமும் இன்றும் ஆச்சரியமானவை! அந்த ஆச்சரிய காலங்களுக்கு அழைத்துச் செல்கிறார் பா. முகிலன், தமிழக தேர்தல்களின் நினைவுச் சுவடுகள் தொடர் மூலம்!
முதல் அத்தியாயம் : நினைவுச் சுவடுகள் : மைக்கில் முழங்கிய தலைவர்களும் மைதானங்களில் காத்திருந்த மக்களும்!
தொலைக்காட்சி விவாதங்கள், சமூக வலைதள வீடியோக்கள், வைரலாகும் பிரசார காணொலிகள் எல்லாம் வருவதற்கு முன்பே, தமிழ்நாட்டுத் தேர்தல் தொடர்பான செய்திகளும், தலைவர்களின் பிரசார செய்திகளும் ஒரு சக்தி வாய்ந்த ஊடகத்தின் வழியாக மக்களைச் சென்றடைந்தன. அதுதான் வானொலி.
இந்தியா சுதந்திரம் அடையும் காலத்திற்கும் முன்பே, வானொலி மக்கள் வாழ்வில் ஒரு முக்கிய தகவல் ஊடகமாக மாறியிருந்தது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் வானொலி ஒளிபரப்புகள் கட்டுப்பாட்டில் இருந்தாலும், முக்கிய செய்திகளை அறிய மக்கள் வானொலியை கவனமாகக் கேட்டு வந்தனர். இரண்டாம் உலகப் போர் செய்திகள், அரசியல் அறிவிப்புகள் போன்றவை வானொலியிலேயே முதலில் கேட்டன.
1947 ஆகஸ்ட் 15 அன்று, இந்தியாவின் சுதந்திர அறிவிப்பும், ஜவஹர்லால் நேருவின் வரலாற்றுச் சிறப்புமிக்க உரையும் வானொலியின் மூலமே கோடிக்கணக்கான மக்களிடம் சென்றடைந்தது. சுதந்திரத்திற்குப் பின், அகில இந்திய வானொலியின் ஒலிபரப்புச் சேவை, தமிழ் உள்ளிட்ட பல்வேறு பிராந்திய மொழிகளில் விரிவடைந்தது. இதனால், வானொலியை நம்பி செய்திகள் கேட்கும் பழக்கம் வலுப்பெற்றது. அதுவே, பின்னாளில் தமிழகத் தேர்தல்களில் அரசியல் குரல்கள் வானொலியின் வழியே மக்களிடம் எளிதாகச் சென்றடைய காரணமாக அமைந்தது.
தேநீர்க் கடையில், கிராமப் பஞ்சாயத்து அலுவலகத்தில், நடுத்தர வகுப்பினரின் வீடுகளின் வரவேற்பறையில் வைக்கப்பட்டிருந்த வானொலிப் பெட்டியிலிருந்து வரும் கரகரப்பான குரல்தான், தலைவர்களின் உரைகளை மக்களிடம் கொண்டு சேர்த்தது. பல ஆண்டுகளாக வானொலிதான் தலைவர்களுக்கும் மக்களுக்கும் இடையே பாலமாக இருந்தது. தேர்தல் நேரத்தில் மாநிலம் முழுவதும் மக்கள் ஒன்றாக உட்கார்ந்து ரேடியோ கேட்டு, அரசியலை அறிந்துகொண்ட காலம் அது. பார்த்ததைவிட கேட்டதன் மூலமாகவே அரசியலை அறிந்துகொண்ட காலம் அது.