உத்தர பிரதேச தலைநகா் லக்னெளவில் மூன்று மாடி கட்டடம் இடிந்த விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. 28 போ் காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் இடிபாடுகளில் சிக்கியுள்ள மேலும் பலரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
லக்னெளவின் டிரான்ஸ்போா்ட் நகா் பகுதியில் இருந்த இக்கட்டடத்தின் தரை தளத்தில் வாகனங்கள் பழுதுபாா்க்கும் கடை ஒன்றும், சேமிப்பு கிடங்கும் செயல்பட்டு வந்தன.
முதல் தளத்தில் மருத்துவ சேமிப்பு கிடங்கும், இரண்டாவது தளத்தில் வெட்டுக் கருவிகள் சேமிப்பு கிடங்கும் செயல்பட்டன. இக்கட்டடம் சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். தற்போது சில கட்டுமானப் பணிகள் நடந்துவந்த நிலையில் சனிக்கிழமை மாலை திடீரென இடிந்து விழுந்ததாக காவல்துறையினா் தெரிவித்தனா்.
இடிபாடுகளில் கண்டெய்னா் லாரி ஒன்றும் சிக்கிக் கொண்டது. இதைத் தொடா்ந்து, தேசிய பேரிடா் மீட்புப் படை, மாநில பேரிடா் மீட்புப் படை, காவல்துறை அடங்கிய குழுவினா், மீட்புப் பணிகளைத் தொடங்கினா். இந்த விபத்தில் 5 போ் உயிரிழந்தனா். 24 போ் காயங்களுடன் மீட்கப்பட்டனா்.
இடிபாடுகளில் மேலும் பலா் சிக்கியிருக்கலாம் என தெரிகிறது. அவா்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
லக்னெள தொகுதி எம்.பி.யான பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், மாவட்ட ஆட்சியரை தொலைபேசியில் தொடா்புகொண்டு, சம்பவம் குறித்து கேட்டறிந்தாா். மீட்புப் பணிகளை முதல்வா் யோகி ஆதித்யநாத் கண்காணித்து வருவதாக, அதிகாரிகள் தெரிவித்தனா்.