இந்தியன் திரைப்படத்தை ஒப்பிடும்போது திரைக்கதையில் இயக்குநர் ஷங்கர் தடுமாறுவது தெரிகிறது. ஆனால், இன்னும் அவரிடமிருக்கும் பிரம்மாண்டங்கள் தீரவில்லை. காலெண்டர், தாத்தா வராரு பாடல்கள், சேனாதிபதியின் சண்டைக்காட்சிகள், ’இப்படி இருந்தால் நன்றாக இருக்குமே’ என்கிற சிந்தனைகள் என படத்தைவிட்டு நழும்போதெல்லாம் சில காட்சிகள் காப்பாற்றிவிடுகின்றன.
குஜராத் தொழிலபதிர்களைக் கதைக்குள் கொண்டு வந்து மேலோட்டமான அரசியலைப் பேசியிருக்கிறார். நாட்டில் நடைபெறும் பெரிய ஊழல்களுக்கு எல்லாம் சின்னச் சின்னதாக லஞ்சம் பெறும் அதிகாரிகளே பெரிய காரணமாக இருப்பதை முதல் பாதியில் கவனிக்கும்படி சொல்லியிருக்கிறார். அதை இன்றைய இளைஞர்களின் ஊடக ஆயுதமான யூடியூப்புடன் இணைத்து காட்சிகளாக மாற்றியதும் ரசிக்க வைக்கிறது.
எத்தனையோ லட்சம் பேர் சிந்திய ரத்தத்தால் கிடைத்த சுதந்திரம் இப்படி லஞ்சம் மற்றும் ஊழல்களால் சீரழிந்து கிடைக்கிறதே என வேதனைப்படும் இந்தியன் தாத்தா இளைஞர்களிடம் என்ன செய்ய வேண்டும் என்பதை சொல்வதுடன் நெருங்கவே முடியாத ஊழல்வாதிகளுக்குத் தன் பாணியில் பதில் சொல்லும் காட்சிகள் கவனத்தை சிதறாமல் பார்த்துக் கொள்கின்றன.
ஆனால், சில காட்சிகளில் பிரம்மாண்ட படங்களுக்கே உரித்தான லாஜிக் இல்லை. குறிப்பாக, வர்மக் கலையால் எதிரிகளைத் தாக்கும் காட்சிகளில் ஐ, அந்நியன் திரைப்படங்களின் நினைவு வருவதையும் தவிர்க்க முடியவில்லை. வர்ம அடியால் ஆண் கதாபாத்திரம் பெண்ணாக மாறுகிறார். அதில், மூன்றாம் பாலினத்தவரின் நளினங்களே இருக்கின்றன. இக்காட்சி நகைச்சுவையாக மாறுவதால், ஷங்கர் கேலிக்காக ஏன் இவற்றை அணுகுகிறார் எனத் தோன்ற வைக்கிறது.
கதை நாயகனான நடிகர் கமல்ஹாசன் சில காட்சிகளில் விசிலடிக்க வைக்கிறார். இத்தனையாண்டு கால நடிப்பால் முதுமையான உடல்மொழியை சில இடங்களில் கச்சிதமாக பயன்படுத்தியிருக்கிறார். அவர் குரலிலிருந்து வரும் வசனங்களும் அதற்கு ஏற்ற தோற்றங்களும் ஏமாற்றத்தை தரவில்லை. ஆனாலும் சில காட்சிகளில் இந்தியன் தாத்தாவின் மேக்கப் தெரிகிறது. கிளைமேக்ஸ் சண்டைக்காட்சியில் கமல் சட்டையைக் கழற்றியதும் திரையரங்கம் அதிர்கிறது.
நடிகர்கள் சித்தார்த், சமுத்திரகனி, பாபி சிம்ஹா, நெடுமுடி வேணு உள்ளிட்டோரின் நடிப்பு கதைக்கு ஏற்ப சரியாக இருக்கின்றன. வில்லனான எஸ்.ஜே.சூர்யாவுக்கு அதிக காட்சிகள் இல்லை. மூன்றாம் பாகத்தில் இருக்கலாம். மறைந்த நடிகர் விவேக், இன்னும் இருந்திருக்கலாம் என எண்ண வைக்கும் அளவிற்கு தனக்கெ உண்டான பஞ்ச் நகைச்சுவை வசனங்களைப் பேசி சிரிக்க வைக்கிறார். தமிழ் சினிமாவிற்கு இழப்புதான்.