பனையூர் பார்ட்டியில் கோலோச்சும் ‘லாட்டரி மாப்பிள்ளை’யை “ஆமை புகுந்த வீடும் இவரு புகுந்த இடமும் வெளங்கவே வெளங்காது” என்று அவரது மச்சானே போட்டுத் தாக்கியதன் கதை வசனம் இயக்கத்தில் ஆளும் கட்சி ‘மாப்பிள்ளை சார்’ கம்பெனியின் கைவண்ணம் இருக்கிறதாம். ‘லாட்டரி மாப்பிள்ளை’யானவர் சின்னவரை ‘நிப்போகிட்’ என்று விளித்துப் பேசியதில் பெரியவருக்கு தாங்க முடியாத கோபமாம்.
முன்பொருமுறை ‘லாட்டரி மாப்பிள்ளை’ இதுபோல் ஓவர் டோஸில் ஆளும் தரப்பை அட்டாக் செய்தபோது, அவரது துணைவியை விட்டே பதில் கொடுக்க வைத்தார்கள். அதேபோல் இம்முறை மாமாவை குளிர்விக்கப் புறப்பட்ட ‘மாப்பிள்ளை சார்’ தனது ரெண்டெழுத்து நிறுவனத்தின் ஆட்கள் மூலம் வசனங்களை தயாரித்து அதை ‘லாட்டரி மாப்பிள்ளை’யின் மச்சானை பிடித்து அட்டாக் பேட்டியாக கொடுக்க வைத்தாராம்.
முதலில் இந்த பேட்டியை சூரிய சேனலில் போடலாம் என்று பேசினார்களாம். ஆனால் அப்படிச் செய்தால், ‘எங்க அப்பன் குதிருக்குள் இல்லை’ என்ற கதையாகி விடும் என்பதால் வேறு சேனல்களில் பேசி அந்தப் பேட்டியைப் போடவைத்தார்களாம். இந்த பிளானுக்காக கணிசமான தொகையும் செலவழிக்கப்பட்டதாம். அடுத்தபடியாக, ஊடக விவாதங் களில் ‘களமாடும்’ பேச்சுப்புலிகள் மூலமும் இதை பேசவைத்து தவணை முறையில் ‘லாட்டரி மாப்பிள்ளை’யின் சீரைக் கெடுக்கும் ‘சிறப்பான’ திட்டத்தையும் வைத்திருக்கிறார்களாம்.