லாட்டரி மார்ட்டின், ஆதவ் அர்ஜுனாவின் வீடு, அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனை | Lottery Martin, Aadhav Arjuna house, office raided by Enforcement Directorate

1339745.jpg
Spread the love

சென்னை / கோவை: சென்னை, கோவையில் லாட்டரி அதிபர் மார்ட்டின், அவரது மருமகன் ஆதவ் அர்ஜுனாவின் வீடுகள், கார்ப்பரேட் அலுவலகம் உள்ளிட்ட 6 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

சிக்கிம் மாநில அரசின் லாட்டரி சீட்டுகளை முறைகேடாக அச்சடித்து விற்று, வருமானம் ஈட்டியதாக கோவையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் மார்ட்டின் மீது புகார்கள் எழுந்தன. இதையடுத்து, கடந்த 2019-ம் ஆண்டு அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், லாட்டரி வியாபாரம் மூலம் முறைகேடாக ரூ.910 கோடி வருவாய் ஈட்டியதையும், அந்த பணத்தை 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் மார்ட்டின் முதலீடு செய்துள்ளதையும் அதிகாரிகள் கண்டறிந்தனர்.

இதைத் தொடர்ந்து, சட்ட விரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையினர் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தினர். மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் தொடர்ந்து சோதனை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக, கடந்த 2019, 2021-ம் ஆண்டுகளில் ரூ.277.59 கோடி, 2022-ம் ஆண்டு ரூ.173.48 கோடி மதிப்பிலான அசையும், அசையாத சொத்துகள் முடக்கப்பட்டன.

கடந்த 2023 மே மாதம் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறையினர் மீண்டும் சோதனை நடத்தி, ரூ.456.86 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கினர். மார்ட்டின் வீடுமற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் கடந்த ஆண்டுஅக்டோபரிலும் சோதனை நடத்தினர். இந்நிலையில், கோவை, சென்னையில் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறையினர் நேற்று மீண்டும்சோதனை நடத்தினர். கோவையில் மேட்டுப்பாளையம் சாலை, துடியலூர் அடுத்த வெள்ளக்கிணறு பிரிவு பகுதியில் உள்ள மார்ட்டின் வீட்டுக்கு அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று காலை 6.30 மணிக்கு வந்து சோதனையை தொடங்கினர். அருகே உள்ள அவரது தொழில் நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகம், ஓமியோபதி கல்லூரியிலும் சோதனை நடத்தினர்.

சென்னை போயஸ் கார்டனில் உள்ள மார்ட்டின் வீடு, ஆழ்வார்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள அவரது மருமகனும், விசிக துணை பொதுச் செயலாளருமான ஆதவ் அர்ஜுனாவின் வீடு, திருவல்லிக்கேணியில் மார்ட்டினின் மகன் டைசனுக்கு சொந்தமான நிறுவனம் உள்ளிட்ட இடங்களிலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சோதனை நடந்த இடங்களில் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். வெளி நபர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இதேபோல, சிக்கிம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலும் மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் நேற்று சோதனை நடந்ததாக கூறப்படுகிறது. இந்த சோதனையில் தேர்தல் நன்கொடை பத்திரம் தொடர்பான ஆவணங்கள், 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் செய்த முதலீடு மூலம் கிடைத்த லாபம், அந்த பணம் எந்தெந்த நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பது தொடர்பான பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

ஆவணங்கள் தொடர்பாக அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சோதனை முழுமையாக முடிந்த பிறகே, கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த முழு விவரங்களை தெரிவிக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *