ரயில்வே வேலைக்கு லஞ்சம் பெற்ற வழக்கில் முன்னாள் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், அவரது மகன்கள் தேஜ் பிரதாப் யாதவ், தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட 9 பேருக்கு தில்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சியின் தலைவரும் பிகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ், கடந்த 2004 முதல் 2009-ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் ரயில்வே அமைச்சராக பதவி வகித்தார்.
அப்போது பாட்னாவைச் சோ்ந்த சிலரை ரயில்வேயின் குரூப்-டி பணிகளில் நியமிக்க, அவா்களுக்கு சொந்தமான நிலத்தை, லஞ்சமாக குறைந்த விலைக்குப் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதைத் தொடர்ந்து, சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
கடந்த ஆகஸ்ட் 6 ஆம் தேதி அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்தது. சிபிஐ வழக்குப்பதிவின் அடிப்படையில் அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் அக்.7 ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.
இதையும் படிக்க | உயிரிழப்புகளுக்கு ஸ்டாலின்தான் பொறுப்பு: இபிஎஸ்
இதையடுத்து லாலு பிரசாத் யாதவ், அவரது மகன்கள் தேஜ் பிரதாப் யாதவ், தேஜஸ்வி யாதவ்(பிகார் முன்னாள் துணை முதல்வர்) உள்ளிட்டோர் தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர்.
தொடர்ந்து இன்றைய விசாரணை முடிவில், லாலு பிரசாத் யாதவ், மனைவி ராப்ரி தேவி, அவரது மகன்கள் தேஜ் பிரதாப் யாதவ், தேஜஸ்வி யாதவ், மகள்கள், மக்களவை எம்.பி. மிசா பாரதி, ஹேமா யாதவ் என 9 பேருக்கு நீதிபதி விஷால் கோக்னே ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார். ஒவ்வொருவரும் ரூ. 1 லட்சம் பிணையத் தொகை வழங்கவும் உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை அக். 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.