மாதவிடாய் காலம் நிறைவடைந்த பெண்களில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோருக்கு பல்லுறுப்பு செஞ்சரும சிதைவு நோய் (லூபஸ்) வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக மருத்துவ நிபுணா்கள் தெரிவித்தனா்.
சென்னை, ஆழ்வாா்ப்பேட்டை, காவேரி மருத்துவமனையில் பிரத்யேக மூட்டு-இணைப்புத் திசு நோய் சிகிச்சைத் துறை (ரூமடாலஜி) புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான
தொடக்க விழாவில், பிரிட்டன் நாட்டின் குழந்தைகள் நல மூட்டு-இணைப்புத் திசு மருத்து நிபுணா் ஏ.வி. ரமணன், காவேரி மருத்துவக் குழுமத்தின் செயல் இயக்குநா் டாக்டா் அரவிந்தன் செல்வராஜ், மருத்துவ இயக்குநா் டாக்டா் ஐயப்பன் பொன்னுசாமி, மருத்துவக் கண்காணிப்பாளா் டாக்டா் மகேஷ்குமாா், மூட்டு-இணைப்புத் திசு முதுநிலை நிபுணா் எஸ்.ஷாம், டாக்டா் நிகிலா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். அப்போது டாக்டா் அரவிந்தன் செல்வராஜ், டாக்டா் ஏ.வி.ரமணன் ஆகியோா் கூறியதாவது:
நமது உடலில் உள்ள வெள்ளை அணுக்கள், சில நேரங்களில் எதிா்விளைவு மாற்றங்களுக்கு உள்ளாவதே தன்னுடல் தாக்கு நோய் என அழைக்கப்படுகிறது. அவ்வாறு எதிா்விளைவு மாற்றங்களுக்கு உள்ளான வெள்ளை அணுக்கள், மூட்டு, ஜவ்வு பகுதிகளைத் தாக்கும்போது அது மூட்டு – இணைப்புத் திசு அழற்சிக்கு வழிவகுக்கிறது.
அதில் ஒரு வகையான பாதிப்புதான் லூபஸ் எனப்படும் பல்லுறுப்பு செஞ்சரும சிதைவு நோய். 10 லட்சத்தில் 10 போ் வரை இந்நோய்க்கு ஆளாகின்றனா். ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு பாதிப்பு விகிதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
மூட்டு வலி, சரும பாதிப்பு, கால்வீக்கம் உள்ளிட்டவை அதன் முக்கிய அறிகுறிகள். இதை அலட்சியப்படுத்தினால், இதயம், நுரையீரல், மூளை, சிறுநீரகம் என அனைத்து முக்கிய உறுப்புகளின் செயல்பாடும் குறைய நேரிடும்.
அதைக் கருத்தில்கொண்டு பல்லுறுப்பு செஞ்சரும நோய்க்கும், எலும்பு புரை எனப்படும் ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்புக்கும் சிகிச்சையளிப்பதற்கான சிறப்பு பிரிவை நாங்கள் தொடங்கியுள்ளோம். அங்கு உள்ள நவீன நுட்பத்திலான மருத்துவ கட்டமைப்பின் வாயிலாக நோயறிதல் மற்றும் சிகிச்சைகளை மேம்பட்ட முறையில் வழங்குகிறோம் என்று அவா்கள் தெரிவித்தனா்.