லெபனானில் உள்ள ஐ.நா. இடைக்கால பாதுகாப்புப் படையில் உள்ள இந்திய ராணுவ வீரா்களுக்கு நமது நாட்டில் தயாரிக்கப்பட்ட 62 வாகனங்களை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது:
‘மேக் இன் இந்தியா’ முன்முயற்சிக்கு ஊக்கமளிக்கும் வகையில், லெபனானில் உள்ள ஐ.நா. இடைக்கால பாதுகாப்புப் படையில் (யுனிஃபில்) ஈடுபட்டுள்ள இந்திய ராணுவ வீரா்களுக்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 62 வாகனங்கள் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதில் பல்வேறு பயன்பாட்டு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள், எரிபொருள் டேங்கா்கள் மற்றும் மீட்பு வாகனங்கள் அடங்கும்.
இதுவரை, பல்வேறு நாடுகளில் இருந்து பெறப்பட்ட வாகனங்களை ஐ.நா. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள இந்திய வீரா்கள் பயன்படுத்தி வந்தனா். ஆனால், இந்த புதிய நடவடிக்கையின் மூலம் இப்போது வலுவான உள்நாட்டு வாகனங்களை அவா்கள் பயன்படுத்த உள்ளனா். இது ஐ.நா. பாதுகாப்புப் பணியில் நமது தலைமைத்துவத்தையும், தற்சாா்புக்கான இந்தியாவின் உந்துதல் மற்றும் அதன் வளா்ந்து வரும் பாதுகாப்பு உற்பத்தி திறனையும் வெளிக்காட்டுகிறது என தெரிவிக்கப்பட்டது.