மூன்றாவது முறையாக மகாராஷ்டிரத்தின் முதல்வராகப் பதவியேற்க உள்ள தேவேந்திர ஃபட்னாவீஸ் பற்றி பள்ளி ஆசிரியர் ஒருவர் பகிர்ந்த சுவாரசிய தகவல்..
மகாராஷ்டிர பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் மும்பையில் இன்று காலை நடத்தப்பட்ட நிலையில், தற்போதைய துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் புதிய முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மும்பையில் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
சட்டப்பேரவை பாஜக குழு தலைவர் ஃபட்னாவீஸ் முதல்வராகப் பதவியேற்க ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், மூன்றாவது முறையாக முதல்வராக நாளை ஃபட்னாவீஸ் பதவியேற்கவுள்ளார்.
முதல்வராக அவர் முதல் முறையாக கடந்த 2014 முதல் 2019 வரை ஆட்சியமைத்தார். இரண்டாவதாக 2019 நவம்பரில் சுமார் 80 மணி நேரம் முதல்வராக நீடித்தார். நாக்பூரின் இளைய மேயராக ஆறு முறை எம்எல்ஏவாக பதவி வகித்த ஃபட்னாவீஸ் மகாராஷ்டிரத்தின் இரண்டாவது தலைநகரான நாக்பூரில் பள்ளிக் கல்வியை முடித்தார்.
இந்த நிலையில், சரஸ்வதி வித்யாலயாவில் 8 முதல் 10ஆம் வகுப்பு வரை ஃபட்னாவீஸின் ஆசிரியராக இருந்த சாவித்ரி சுப்ரமணியம் அவரது இயல்பை சுவாரசியமாக நினைவு கூர்ந்துள்ளார்.
ஃபட்னாவீஸ் வகுப்பில் உயரமான மாணவர்களில் ஒருவராக இருந்ததால் வகுப்பின் பின் வரிசையில் எப்போதும் அமர்ந்திருப்பார். படிப்பில் சராசரி மாணவர் தான். ஆனால் அசாதாரணமானவர், நன்றாகப் படித்தார். அவர் மிகவும் கண்ணியமான, மகிழ்ச்சியான மாணவர்.