வக்ஃப் மசோதா நிறைவேற்றம்: நிதிஷ்குமார் மீது கட்சியினர் அதிருப்தி!

Dinamani2f2025 04 032f3ktvsx3u2fpti2019sept106 22 10 2019 12 50 22.jpg
Spread the love

வக்ஃப் திருத்த மசோதாவுக்கு ஜே.டி.(யு) கட்சி ஆதரவளித்ததைத் தொடர்ந்து கட்சித் தலைமை மீது முஸ்லிம் நிர்வாகிகள் பலர் அதிருப்தியில் உள்ளனர்.

மக்களவையில் இன்று (மார்ச். 3) அதிகாலை வக்ஃப் திருத்த மசோதா 2024 நிறைவேற்றப்பட்டது .இதற்கு ஆதரவாக பிகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் (ஜே.டி.யு) கட்சி வாக்களித்தது.

இதனால், கட்சிக்குள் நிர்வாகிகள் மற்றும் தலைமைக்கிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வக்ஃப் மசோதா நிறைவேற்றத்தில் ஜே.டி.(யு) கட்சியின் நிலைப்பாடு குறித்து கட்சியில் உள்ள முஸ்லிம் தலைவர்கள் பலரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தை சட்ட ரீதியாக கையாளவிருப்பதாக அவர்கள் தெரிவித்த நிலையில், எராடா-இ-ஷரியா (பீகார், ஜார்கண்ட் & ஒடிசா) எனப்படும் முஸ்லிம் அமைப்பினருடன் கூட்டம் நடத்தி இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.

ஜே.டி.(யு) சட்ட மேலவை உறுப்பினர் குலாம் கவுஸ், முன்னாள் எம்பி அஸ்ஃபாக் கரீம் ஆகியோரும் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

மேலும், இதனால் ஜே.டி.(யு) கட்சியை விட்டு பல முஸ்லிம் தலைவர்கள் வெளியேற திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து, மூத்த தலைவர் முகமது காசிம் அன்சாரி கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலும் இருந்து வெளியேறுவதாக தெரிவித்தார்.

முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும் ஜே.டி.(யு) பொதுச் செயலாளருமான குலாம் ரசூல் பால்யாவி, “வக்ஃப் திருத்த மசோதாவிற்கு ஜே.டி.(யு) ஆதரவாக வாக்களித்தது ஏமாற்றமளித்துள்ளது. மதச் சார்பற்றவர்களுக்கும் வகுப்புவாத சக்திகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று உணர்கிறேன்.

எராடா-இ-ஷரியா அமைப்பின் சார்பில் 31 பக்க அறிக்கையை நாடாளுமன்ற கூட்டுக் குழுவிடம் சமர்ப்பித்திருந்தோம். மேலும், மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்படும் முன்பு முதல்வர் நிதிஷ் குமாரிடம் இதுபற்றிப் பேசினோம். ஆனால், யாரும் எங்களின் கருத்துகளுக்கு செவி சாய்க்கவில்லை. விரைவில், மசோதாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யவுள்ளோம்” என்று அவர் தெரிவித்தார்

அவர் மட்டுமின்றி ஜே.டி.(யு)-வின் முன்னாள் சிறுபான்மை பிரிவுத் தலைவரும் பிகார் சட்டப்பேரவைக் குழு துணைத் தலைவருமான சலீம் பர்வேஸ் விரைவில் நிதீஷ் குமாரைச் சந்தித்து வக்ஃப் மசோதா விவகாரத்தில் முஸ்லிம் தலைவர்களிடையே ஏற்பட்டுள்ள அதிருப்தி பற்றி தெரிவிக்கவுள்ளதாகக் கூறினார்.

பிகார் மாநில மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 17.70% பேர் உள்ளனர். மொத்தமுள்ள 243 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 50 இடங்களில் முஸ்லிம்களின் வாக்குகள் முக்கிய பங்காற்றுவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், மக்களவையில் வக்ஃப் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதால் பிகாரில் முஸ்லிம் அமைப்புகள் போராட்டம் நடத்தக்கூடும் என்பதால் மாநிலம் முழுவதும் காவல்துறை பாதுகாப்பு அத்கிகரித்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *