வக்பு சட்டம் | ஆட்சியர் அதிகாரம் உள்ளிட்ட சில விதிகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை: முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு | cm stalim slams bjp govt over Waqf Amendment Act issue

1376591
Spread the love

சென்னை: ‘வக்பு பயனர்’ என்பதை நீக்கும் மாவட்ட ஆட்சியருக்கான அதிகாரத்துக்குத் தடை உள்ளிட்ட, வக்பு சட்டத்தின் சில விதிகளுக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “திமுகவும் மற்ற மனுதாரர்களும் வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிராக தொடர்ந்த வழக்கில், ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்துள்ள முக்கியத் திருத்தங்களுக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

1) வக்புக்குச் சொத்தை அளிக்க, 5 ஆண்டு இஸ்லாத்தைக் கட்டாயமாக நடைமுறையில் கடைப்பிடித்திருக்க வேண்டும் எனும் விதிக்குத் தடை

2) வக்பு நிலத்தை அரசு நிலம் என்று ஒரு குற்றச்சாட்டு எழுந்தாலே, உரிய அதிகாரி அறிக்கை அளிக்கும்வரை அல்லது அரசு முடிவெடுக்கும் வரை அச்சொத்தைப் பறிக்கும் அதிகாரத்துக்குத் தடை

3) ‘வக்பு பயனர்’ என்பதை நீக்கும் மாவட்ட ஆட்சித் தலைவருக்கான அதிகாரத்துக்குத் தடை (நீண்டகால மதப் பயன்பாட்டின் அடிப்படையில் வக்பு சொத்துகளாகக் கருதப்படும் சொத்து)

4) மத்திய வக்பு வாரியத்தில் நான்குக்கும் மேற்பட்ட முஸ்லிம் அல்லாதோரை சேர்ப்பது, மாநில வக்பு வாரியங்களில் மூன்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம் அல்லாதோரை சேர்ப்பதற்கு தடை. இதனால், இந்த வாரியங்களில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருப்பது உறுதிசெய்யப்படும்.

ஒன்றிய பாஜக அரசு அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக, சட்டவிரோதமாக செய்துள்ள திருத்தங்களை நீக்குவதை நோக்கிய முக்கிய நகர்வாக இன்றைய நீதிமன்ற உத்தரவு அமைந்துள்ளது. இந்த சட்டத்திருத்த முன்வரைவு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்தே, திமுக இதனை தொடர்ச்சியாக எதிர்த்து வந்துள்ளது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள பலரோடு சேர்ந்து வெற்றியும் கண்டுள்ளது. திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசும் ஒன்றிய அரசு வக்பு திருத்த சட்டத்தைத் திரும்பப் பெறவேண்டும் என வலியுறுத்திச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, ஆட்சி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் பாஜகவின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தது.

இந்நிலையில், இன்றைய உத்தரவு இஸ்லாமியர்களின் மத உரிமைகளையும், அடிப்படை உரிமைகளையும் அரசியலமைப்பு சட்டத்தையும் உச்ச நீதிமன்றம் பாதுகாக்கும் என மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை வலுப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *