‘வக்பு சட்ட மசோதா நிறைவேற்றம் அரசமைப்பு மீதான தாக்குதல்; வழக்கு தொடர்வோம்’ – முதல்வர் ஸ்டாலின் | DMK will file case against Wakf amendment bill in Supreme Court: TN CM Stalin

1356748.jpg
Spread the love

சென்னை: “கடுமையான எதிர்ப்புகளையும் மீறி வக்பு சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது இந்திய அரசமைப்பின் மீதான ஒன்றிய அரசின் தாக்குதல். இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடரும்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) சட்டப்பேரவையில் கூறினார். மேலும், மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின், திமுக எம்எல்ஏ.,க்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து சட்டப்பேரவைக்கு வந்திருந்தனர்.

முன்னதாக, மக்களவையில் ஆளும் தரப்புக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் விடிய விடிய நடந்த காரசார விவாதத்துக்கு பிறகு வக்பு திருத்த மசோதா நிறைவேறியது. இதற்கு ஆதரவாக 288 பேரும், எதிராக 232 பேரும் வாக்களித்தனர். வியாழக்கிழமை அதிகாலை 2 மணியளவில் இந்த மசோதா நிறைவேறியது. தொடர்ந்து இன்று (ஏப்ரல் 3) மாநிலங்களவையில் இந்த மசோதா விவாதிக்கப்பட உள்ளது.

இந்நிலையில், “கடுமையான எதிர்ப்புகளையும் மீறி வக்பு சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது இந்திய அரசமைப்பின் மீதான ஒன்றிய அரசின் தாக்குதல். இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடரும்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “

“கடந்த 27-03-2025 அன்று இந்த மாமன்றத்தில் ஒரு தீர்மானத்தை நாம் நிறைவேற்றினோம். இந்தியத் திருநாட்டின் மத நல்லிணக்கத்திற்கும் சிறுபான்மையின இஸ்லாமிய சமுதாய மக்களுக்கும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில், 1995-ஆம் ஆண்டின் வக்பு சட்டத்தினைத் திருத்துவதற்கு மக்களவையில் அறிமுகம் செய்துள்ள வக்பு சட்டத் திருத்த முன்வரைவினை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்ற தீர்மானம் பாஜக நீங்கலாக அனைத்துக் கட்சிகளாலும் ஒருமனதாக ஏற்றுக் கொண்டு நிறைவேற்றப்பட்டது.

இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான அரசியல் கட்சிகளால் இந்த வக்பு சட்டத் திருத்தம் எதிர்க்கப்பட்டது. இவை அனைத்தையும் மீறி நாடாளுமன்ற மக்களவையில் வக்பு சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டிருப்பது மிகுந்த கண்டனத்துக்குரியது. வக்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக 232 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளார்கள். ஆதரவாக 288 உறுப்பினர்கள் வாக்களித்துள்ளார்கள்.

இந்தச் சட்டத் திருத்த மசோதாவானது நிறைவேற்றப்பட்டு இருந்தாலும் எதிர்த்து வாக்களித்தவர்களின் எண்ணிக்கை 232 என்பது சாதாரணமான எண்ணிக்கை அல்ல, எண்ணிக்கை கூடுதலாகக் கிடைத்து இருக்கலாம். ஆனால், இந்தச் சட்டத் திருத்தம் எதிர்க்கப்பட வேண்டியது மட்டுமல்ல; முழுமையாகத் திரும்பப் பெற வேண்டியது என்பதுதான் நம் கருத்து. அதைத்தான் நாம் இங்கே தீர்மானமாக நிறைவேற்றி அனுப்பியிருந்தோம்.

இந்தியாவில் இருக்கும் பெரும்பான்மைக் கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி ஒரு சில கூட்டணிக் கட்சிகளின் தயவால் அதிகாலை 2 மணியளவில் இத்தகைய சட்டத்தை நிறைவேற்றி இருப்பது இந்திய அரசியல் சட்டத்தின் கட்டமைப்பின் மீது செய்யப்பட்ட தாக்குதல்; மதநல்லிணக்கத்தைக் குலைக்கும் செயல். இதனை உணர்த்தும் வகையில் கருப்புச் சின்னத்தை அணிந்து இன்றைய பேரவை நடவடிக்கைகளில் நாங்கள் பங்கெடுக்கிறோம்.

சர்ச்சைக்குரிய இந்த சட்டத்திருத்தத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்படும் என்பதை இம்மாமன்றத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

வக்பு வாரியத்தின் தன்னாட்சியை அழித்து, சிறுபான்மை இசுலாமிய மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒன்றிய அரசின் சட்டத்துக்கு எதிராக தமிழ்நாடு போராடும்! போராடும்! போராடும்! அதில் வெற்றியும் பெறும்.

அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதலை சட்டபூர்வமாகவே தடுப்போம் என்று இந்த மாமன்றத்தில் உறுதி அளிக்கிறேன்.” என்றார்.

மேலும் வாசிக்க>> ஆதரவு 288, எதிர்ப்பு 232: மக்களவையில் நிறைவேறியது வக்பு திருத்த மசோதா

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *