“வக்பு தானம் Vs கோயில் உண்டியல் Vs பாஜக நன்கொடை…” – சு.வெங்கடேசன் எம்.பி பேச்சு | Su Venkatesan MP speech on Waqf Amendment Bill at CPIM protest in tamil nadu

1358583.jpg
Spread the love

மதுரை: “இந்துக் கோயில் உண்டியல்களில் காசு போடுகிறவர்கள் 5 ஆண்டுகள் இந்துக்களாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு சட்டத் திருத்தம் கொண்டு வருமா?” என்று வக்பு திருத்தச் சட்டம் விவகாரத்தில் சு.வெங்கடேசன் எம்.பி. கேள்வி எழுப்பினார்.

மத்திய பாஜக அரசின் வக்பு சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி மதுரை மாநகர் மார்க்சிஸ்ட் சார்பில் தெற்குவாசல் மார்க்கெட் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்டு சு.வெங்கடேசன் எம்.பி. பேசியது: “வக்புக்கு தானம் கொடுப்பது, கொடை கொடுப்பது யாரும் கொடுக்கலாம். அது மதத்துக்கு கொடுப்பது அல்ல. இறைவனுக்கு கொடுப்பது. மதம்தான் மனிதனுக்கு வேறு வேறு. இறை நம்பிக்கை என்பது எல்லோருக்கு ஒன்று. அவர்கள் எந்த இறைவனை ஏற்கிறார்களோ, அந்த இறைவனுக்கு நாம் கொடுப்பது.

ஆனால், வக்பு வாரியத்துக்கு நீ தானம் கொடுக்க வேண்டும் என்றால், 5 ஆண்டுகள் இஸ்லாமியராக இருந்திருக்க வேண்டும் என்று ஒரு சட்டத் திருத்தம். என்ன அநியாயம் இது? இதோ அந்த ரோட்டு மேல் ஒரு பிள்ளையார் கோயில் இருக்கிறது. அதில் ஓர் உண்டியல் இருக்கிறது. போகிறப்போக்கில் ஒருவர் சாமியைக் கும்பிட்டுவிட்டு உண்டியலில் காசு போட்டுவிட்டுச் செல்கிறார். இந்துக் கோயில் உண்டியல்களில் காசு போடுகிறவர்கள் 5 ஆண்டுகள் இந்துக்களாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு சட்டத் திருத்தம் கொண்டு வருமா?

இந்தக் கேள்வி உண்மையா இல்லையா? இந்தக் கேள்வியில் நியாயம் இருக்கிறதா, இல்லையா? அது மதம் சம்பந்தப்பட்டது அல்ல. அது இறை நம்பிக்கை சம்பந்தப்பட்டது. எந்த இறைவன் தன்னை ரட்சிக்கிறான் என்று மனிதன் நினைக்கிறானோ, அந்த இறைவனுக்கு எதையும் கொடுப்பான். அது அவரவருடைய இறை நம்பிக்கை, மத நம்பிக்கை, மத உரிமை, அரசியல் சாசன சட்டம் வழங்கியிருக்கிற உரிமை.

வக்பு வாரியத்துக்கு கொடையாக கொடுப்பவர்கள் 5 ஆண்டுகள் இஸ்லாமியர்களாக இருக்க வேண்டும் என்ற சட்டத் திருத்தத்தைப் போல ஒரு கொடிய திருத்தம் இந்திய வரலாற்றில் இதுவரை கிடையாது. நாங்கள் கேட்கிறோம்… பாஜகவுக்கு நன்கொடை கொடுப்பவர்கள் 5 ஆண்டுகள் பாஜகவின் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும் என்று அவர்களுடைய கட்சிக்கு சட்டத் திருத்தம் கொண்டு வரவார்களா?

அது வேண்டாம். அமலாக்கத் துறை வருமான வரித்துறை சோதனை நடக்கிறதே, சோதனைக்கு உள்ளாகும் நபர்களிடம் 5 வருடத்துக்கு நன்கொடை பெறமாட்டோம் என்று பாஜகவால் சொல்ல முடியுமா? சொன்னால் அவர்கள் கஜானாவே காலி” என்று சு.வெங்கடேசன் எம்.பி பேசினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *