வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது | Low pressure area gathering strength, likely to bring heavy downpour over north TN on Tuesday

1326114.jpg
Spread the love

சென்னை: தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து அடுத்த 2 நாட்களில் புதுச்சேரி, வடதமிழகம், தெற்கு ஆந்திரா கடலோர பகுதியை நோக்கி நகரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மழை நிலவரம்: சென்னையில் நேற்றிரவு விட்டுவிட்டு மழை பெய்த நிலையில் காலையில் மீண்டும் மழை தொடங்கியுள்ளது. எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் பெரம்பூர் சுரங்கப்பாதையைத் தவிர வேறு எந்த சுரங்கப்பாதையிலும் மழைநீர் தேங்கவில்லை என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதேபோல், சென்னையில் நேற்று இரவு பெய்த மழையில் 8 மரங்கள் சாய்ந்தன, அவை அனைத்தும் உடனே அகற்றப்பட்டன என்றும் தெரிவித்துள்ள்து.

சென்னையில் காலை 10 மணி வரை கனமழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று (அக்.15) இரவு தொடங்கி சென்னையில் மிக கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் எண்ணூர் பகுதியில் அதிகபட்சமாக 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மீனாம்பக்கத்தில் 5, அண்ணா பல்கலைக்கழகம் பகுதியில் 4 செமீ மழை பதிவாகியுள்ளது.

சென்னையில் நேற்றிரவு கனமழைக்கு இடையே நாராயணபுரம் ஏரி, அம்பேத்கர் மழை நீர் வடிகால் பகுதிகளில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

கோவையில் பள்ளிகள் அரைநாள் இயங்கும்: மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று (அக்.15) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, கடலூர் மாவட்டத்திலும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. விழுப்புரத்தில் இன்றைக்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் அரசு, தனியார், அரசு உதவிபெறும் பள்ளிகள் அரை நாள் மட்டும் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் 6.86 செ.மீ. மழை பதிவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக கும்மிடிபூண்டியில் 10 செமீ மழை; பொன்னேரி-9 செமீ, தாமரைப்பாக்கம் 6 செமீ, ஊத்துக்கோட்டை 5 செமீ மழை; பூண்டி, திருவள்ளூர், சோழவரம் பகுதியில் 4 செமீ மழை பதிவு.

கன மழை எச்சரிக்கை காரணமாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்று நடைபெற இருந்த பல்கலைக்கழக தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கடலூர் மாவட்டத்தில் உள்ள உறுப்பு கல்லூரி தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படுவதாகவும் பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் சேவை: கனமழையின் காரணமாக, பயணிகளின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அக்டோபர் 15, 16 மற்றும் 17 ஆகிய நாட்களில் கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: “கனமழையின் காரணமாக, பயணிகளின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அக்டோபர் 15, 16 மற்றும் 17 ஆகிய நாட்களில் கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். ​

காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். (முதல் மெட்ரோ ரயில் அனைத்து முனையங்களிலிருந்தும் காலை 5 மணிக்குப் புறப்படும் மற்றும் கடைசி மெட்ரோ ரயில் அனைத்து முனையங்களிலிருந்தும் இரவு 11 மணிக்கு புறப்படும்).

இருப்பினும், மேற்கூறிய அட்டவணைகள் அனைத்தும் வானிலை நிலையைப் பொறுத்து வழக்கமான சேவைக்கு மாற்றியமைக்கப்படும். முந்தைய அனுபவத்தின்படி, கனமழை காரணமாக தண்ணீர் தேங்கும் வாய்ப்புள்ள மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்துமிடங்களில் (குறிப்பாக பரங்கிமலை மற்றும் அரும்பாக்கம் மெட்ரோ) பயணிகள் தங்கள் வாகனங்களை 15.10.2024 முதல் 17.10.2024 வரை நிறுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். (தேவைப்பட்டால் வானிலை நிலையைப் பொறுத்து தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்).

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *