வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி: இந்திய வானிலை ஆய்வு மையம் | Depression formed in Bay of Bengal: IMD

1325205.jpg
Spread the love

சென்னை: தென் கிழக்கு வங்கக்கடலில் இன்று (அக்.14) காலை 5.30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி மேற்கு, வடமேற்கு திசை நோக்கி நகரும் என்றும் கணித்துள்ளது. இதனால் தமிழகத்தின் வட மாவட்டங்களில் மழை அதிகரிக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ள சூழலில் அக்.15, 16-ம் தேதிகளில் வட தமிழகம், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதனால், இன்று முதல் 17-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்யக்கூடும் என்று ஏற்கெனவே சென்னை வானிலை ஆய்வு மையமும் தெரிவித்திருந்தது.

மேலும், தென்னிந்திய பகுதிகளில் கிழக்கு, வடகிழக்குதிசையில் இருந்து காற்று வீசத் தொடங்கியுள்ளது. இதன் தாக்கத்தால், தென்னிந்திய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை வரும் 15 அல்லது 16-ம் தேதி தொடங்கக் கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தான் தென் கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடதமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதை ஒட்டி நகர்வதால் வட கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது. சென்னைக்கு இன்று (அக்.14) கனமழைக்கான எச்சரிக்கையும் நாளை (அக்.15) மிக கனமழைக்கான எச்சரிக்கையும் நாளை மறுநாள் (அக்.16) அதி கனமழைக்கான ரெட் அலர்ட்டும் விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.

முன்னதாக, தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால். மாவட்ட ஆட்சியர்கள் மழை நிலவரங்களை கண்காணித்து அனைத்துவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டு தலைமைச் செயலர் கடிதம் அனுப்பியிருந்தது கவனிக்கத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *