வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: நவ.23, 24-ல் வட மாவட்டங்கள், டெல்டாவில் கனமழை | Heavy rain in northern districts, Delta

Spread the love

சென்னை: சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரைக்கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய இலங்கை பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி குமரிக்கடல் மற்றும் அதையொட்டி பகுதிகளுக்கு நகர்ந்துள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு – வடமேற்கு திசையில் மெதுவாக நகரக்கூடும்.

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் வரும் 22-ம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும். இது அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெறக்கூடும். வரும் 22, 23-ல் கடலோர தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வரும் 23-ம் தேதி திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 24-ம் தேதி திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் 2 நாட்களுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *