புதுதில்லி: அதானி பவர் நிறுவனம் தனது 1,600 மெகாவாட் திறன் கொண்ட ஜார்க்கண்ட் மின் உற்பத்தி நிலையத்திலிருந்து, வங்கதேசத்திற்கு தொடர்ந்து மின்சாரம் வழங்க உள்ளதாக வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
இந்த மாத தொடக்கத்தில், மின்வாரிய அமைச்சகம் இறக்குமதி / ஏற்றுமதி வழிகாட்டுதல்களில் திருத்தம் செய்தது. இதைத் தொடர்ந்து, அண்டை நாடுகளுக்கு பிரத்யேகமாக மின்சாரம் வழங்குவதற்கான 2018ம் ஆண்டில் வகுக்கப்பட்ட வழிகாட்டுதல் சட்ட விதிகளில் மின்வாரிய அமைச்சகம் கடந்த 12ம் தேதி திருத்தம் செய்தது.
மின் திட்டத்தின் மொத்த உற்பத்தி திறனிலிருந்து முழுமையாக அல்லது பயன்படுத்தப்படாத மின்சாரத்தை இந்தியாவில் விற்பனை செய்வதற்கு வசதியாக அத்தகைய மின் உற்பத்தி நிலையத்தை இந்திய மின் தொகுப்புடன் (கிரிட்) இணைக்க மின்வாரிய அமைச்சகம் அனுமதிக்கலாம் என்று விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது.
அதானி பவரின் 1,600 மெகாவாட் கோட்டா ஆலையில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் வங்கதேசத்துக்கு சப்ளை செய்ய வங்கதேச மின் மேம்பாட்டு வாரியத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதனையடுத்து வங்கதேச பவர் டெவலப்மென்ட் போர்டு கோரிக்கை அட்டவணை மற்றும் மின்சாரம் கொள்முதல் ஒப்பந்த விதிகளின்படி ஒப்பந்தங்களை நிறைவேற்ற நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.
தற்போது வங்கதேசத்தில் அசாதாரணமான சூழ்நிலை நிலவுவதால் அங்கு மின்சாரம் விற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அதானி குழுமம் இந்தியாவிலேயே மின்சாரத்தை விற்கும் வகையில் சலுகைகளை வழங்கி உள்ளது மின்வாரிய அமைச்சகம்.
இந்தியாவில் மின்சார பற்றாக்குறை ஒரு சதவிகிதத்திற்கும் குறைவாக இருந்தாலும், அதிகரித்து வரும் தேவைக்கு மத்தியில் இந்தியா பூஜ்ஜிய பற்றாக்குறை மின்சார விநியோக நாடாக இருக்க முயற்சிக்கிறது. இதற்கிடையில், இந்த ஆண்டு மே மாதத்தில் இந்தியாவின் மின் தேவை இதுவரை இல்லாத அளவுக்கு 250 ஜிகாவாட்டை எட்டியது. இந்த கோடை காலத்தில் உச்ச மின் தேவை 260 ஜிகாவாட் அளவை எட்டக்கூடும் என்று மின்சார அமைச்சகம் கணித்துள்ளது.