வங்கதேசத்தில் இந்து சிறுபான்மை சமூகத்தின் மீது குறிவைக்கப்பட்ட தாக்குதல்களுக்கு மத்தியில், அங்கு வாழும் இந்துக்கள் எந்த காரணமும் இல்லாமல் வன்முறைக்கு ஆளாகின்றனர், நம் நாடு அவர்களின் நலனை உறுதிப்படுத்த வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கூறியுள்ளார்.
சுதந்திர தினத்தையொட்டி மகால் பகுதியில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து அவர் பேசினார்.
வரவிருக்கும் தலைமுறைக்கு சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டிய கடமை உள்ளது. ஏனென்றால் உலகில் எப்போதும் மற்ற நாடுகளில் ஆதிக்கம் செலுத்த விரும்பும் மக்கள் உள்ளனர். அவர்கள் மத்தியில் நாம் எப்போதும் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும். அவர்களிடமிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
எல்லா நேரத்திலும் இதே நிலைமை நீடிக்காது. ஏற்ற தாழ்வுகள் தொடரும். அண்டை நாட்டில் நிறைய வன்முறைகள் நடக்கின்றன. அங்கு வாழும் இந்துக்கள் காரணமே இல்லாமல் வன்முறையை எதிர்கொள்கின்றனர்
இந்தியா மற்றவர்களுக்கு உதவும் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்தியா யாரையும் தாக்கியதில்லை. அவர்கள் எங்களுடன் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல் பிரச்னையில் உள்ளவர்களுக்கு உதவி செய்து வருகிறது.
இந்த நிலையில், நமது நாடு பாதுகாப்பாக இருப்பதையும், அதே நேரத்தில் மற்ற நாடுகளுக்கு உதவுவதையும் நாம் பார்க்கிறோம்.
வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு கவிழ்ந்த பிறகு இந்து சிறுபான்மை சமூகத்தினர் மீது குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
ஹசீனா பதவி நீக்கம் செய்யப்பட்டதிலிருந்து 48 மாவட்டங்களில் 278 இடங்களில் சிறுபான்மை சமூகம் தாக்குதல்களையும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டதாக வங்கதேச தேசிய இந்து மகா கூட்டணி குற்றம் சாட்டியுள்ளது.
கடந்த வாரம் ஷேக் ஹசீனா ராஜிநாமா செய்ததற்கு முன்னரும் அதற்குப் பின்னரும் போராட்டக்காரர்களின் கொலைகள் குறித்து விசாரிக்க ஐ.நா நிபுணர்கள் குழு விரைவில் வங்கதேசத்துக்குச் செல்ல உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.