2024-ம் ஆண்டு, ஜூலை மாதம் வங்கதேசமே கலவரப்பூமியாக இருந்தது.
இட ஒதுக்கீடு, ஊழல், கொலைகள் போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து, வங்கதேசத்தின் இளைஞர்கள் பட்டாளம் அப்போதைய வங்கதேச அரசை எதிர்த்துப் போராடியது. இந்தப் போராட்டம் அந்த நாடு முழுவதும் பரவியது.
இதனையடுத்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவிற்கு ஓடி வந்தார் அப்போதைய வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா.
அதன் பின், நிலைமை ஓரளவு சரியாகி, வங்கதேசத்தின் இடைக்கால பிரதமராக நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் பதவியேற்றார்.
பின்னர், வங்கதேசம் மெல்ல மெல்ல இயல்பிற்குத் திரும்பத் தொடங்கியது. தற்போது வங்கதேசம் நாடாளுமன்ற தேர்தலைக் கூட சந்திக்க தயாராகி இருந்தது.

ஷெரீப் உஸ்மான் ஹாடி சுட்டுக்கொலை
இந்த நிலையில், 2024-ம் ஆண்டு நடந்த போராட்டத்தை முன்னெடுத்த மாணவர் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி கடந்த 12-ம் தேதி டாக்காவில் சுடப்பட்டார். அவரது நிலைமை மிகவும் மோசமாக இருந்ததால், சிங்கப்பூர் அழைத்து செல்லப்பட்டார். அங்கே சிகிச்சைக்கு பலனில்லாமல் இறந்துவிட்டார்.
இது தான் தற்போதைய கலவரத்திற்கு காரணம். ஷெரீப் இந்தியாவிற்கு எதிரான கருத்துகளை, கொள்களைக் கொண்டவர். இவரைக் கொன்றது இந்தியா தான்… ஷெரீப்பை சுட்டவர் இந்தியாவிற்கு சென்றுவிட்டார் என்று வங்கதேசம் குற்றம் சாட்டுகிறது.