வங்கதேசத்தில் மேலும் 2 ஹிந்து துறவிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக இஸ்கான் அமைப்பின் கொல்கத்தா கிளை தெரிவித்துள்ளது.
வங்கதேசத்தில் இஸ்கான் அமைப்பின் முன்னாள் உறுப்பினரும், ஹிந்து ஆன்மிக தலைவருமான சின்மய் கிருஷ்ண தாஸ், தேச விரோத வழக்கில் கைது செய்யப்பட்டாா். அவருக்கு அந்நாட்டில் உள்ள சட்டோகிராம் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஜாமீன் அளிக்க மறுத்ததைத் தொடா்ந்து, அவா் சிறையில் அடைக்கப்பட்டாா்.
இந்நிலையில், இஸ்கான் அமைப்பின் கொல்கத்தா கிளை செய்தித்தொடா்பாளா் ராதாராமன் தாஸ் ‘எக்ஸ்’ தளத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘வங்கதேசத்தில் இஸ்கான் அமைப்பைச் சோ்ந்த மேலும் 2 துறவிகளை காவல் துறை கைது செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது’ என்றாா்.
ஆா்எஸ்எஸ் வலியுறுத்தல்: இந்த சம்பவங்கள் தொடா்பாக ஆா்எஸ்எஸ் பொதுச் செயலா் தத்தாத்ரேய ஹொசபலே வெளியிட்ட அறிக்கையில், ‘வங்கதேசத்தில் ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறையை அந்நாட்டின் இடைக்கால அரசு நிறுத்த வேண்டும். சின்மய் கிருஷ்ண தாஸ் சிறையில் இருந்து உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். அந்நாட்டில் ஹிந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையை நிறுத்த மத்திய அரசு தொடா்ந்து முயற்சிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.