வங்கதேசத்தில் கடந்த வாரம் முதல் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் இதுவரை 8 பேர் இறந்ததாகவும், ஆறுகள் கரைபுரண்டோடுவதால் 20 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெற்காசிய நாடான வங்கதேசத்தில் 17 கோடி மக்கள் வாழ்கின்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட ஆறுகள் குறுக்கே ஓடுகின்ற வங்கதேசத்தில் பல வெள்ளங்கள் கடந்த சில தசாப்தங்களில் ஏற்பட்டுள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் இரு பதின்வயது மாணவர்கள் வெள்ளத்தில் படகு கவிழ்ந்து நீரில் மூழ்கி இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெள்ளத்தில் படகில் சென்றபோது மின்சாரம் தாக்கி 3 பேர் இறந்ததாகவும், மேலும் 3 பேர் வெள்ளத்தில் சிக்கி வெவ்வேறு இடங்களில் இறந்ததாகவும் குரிகிராம் பகுதி காவல்துறை அதிகாரி பிஷ்வதேவ் ராய் தெரிவித்தார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நூற்றுக்கணக்கில் தங்குமிடங்களை ஏற்பாடு செய்துள்ளதாகவும், நாட்டின் வடக்குப் பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தண்ணீர், உணவு உதவிகளை அனுப்பியுள்ளதாகவும் வங்கதேச அரசு தெரிவித்துள்ளது.
நாட்டிலுள்ள 64 மாவட்டங்களில் 17 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை 20 லட்சம் மக்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வங்கதேச பேரிடர் மேலாண்மை துறைச் செயலாளர் கம்ருல் ஹாசன் தெரிவித்தார்.
வருகின்ற நாட்களில் வடக்கு பகுதியில் வெள்ளத்தின் நிலைமை மோசமடையக்கூடும் என்றும், பங்களாதேஷின் முக்கிய நீர்வழிகளில் ஒன்றான பிரம்மபுத்திரா நதியின் நீர்மட்டம் சில பகுதிகளில் ஆபத்து அளவை மீறியுள்ளது என்றும் அவர் கூறினார்.
மிகவும் பாதிப்படைந்துள்ள குரிகிராம் மாவட்டத்திலுள்ள 9 கிராமங்களில் எட்டு கிராமங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன என்று உள்ளூர் பேரிடர் நிவாரண அதிகாரி அப்துல் ஹயே தெரிவித்தார்.
”இங்கு வெள்ளம் அடிக்கடி வரும். ஆனால் இந்த வருடம் வெள்ளம் மிகவும் அதிகமாக இருந்தது. மூன்று நாட்களில் பிரம்மபுத்திரா ஆறு முதல் எட்டு அடிகள் (2-2.5 மீட்டர்கள்) உயர்ந்துள்ளது. எங்கள் பகுதியில் 80 சதவீதத்திற்கும் மேல் வீடுகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. நாங்கள் உணவுப்பொருள்கள் வழங்க முயற்சித்து வருகிறோம். ஆனால் குடிநீர் பற்றாக்குறை உள்ளது” என்று குரிகிராம் பகுதியில் வசிக்கும் கவுன்சிலர் ஒருவர் கூறியுள்ளார்.
வங்கதேசம் தற்போது கோடை பருவமழைக் காலத்தில் இருக்கிறது. இது தெற்காசியாவிற்கு ஆண்டுதோறும் வரும் மழைப்பொழிவின் 70-80 சதவீதத்தை கொண்டுவருகிறது. மேலும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் உண்டாகும் மரணங்கள் மற்றும் அழிவுகளும் தொடர்ந்து ஏற்படுகின்றன.
காலநிலை மாற்றம் பருவமழையை மேலும் ஒழுங்கற்றதாக ஆக்கியுள்ளது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.