வங்கதேசத்தை வீழ்த்திய நியூசிலாந்து; அரையிறுதிக்கு முன்னேறிய நியூசி., இந்தியா!

Dinamani2f2025 02 242fno5g657s2fap25055568587500.jpg
Spread the love

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ராவல்பிண்டியில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் நியூசிலாந்து மற்றும் வங்கதேசம் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, வங்கதேசம் முதலில் விளையாடியது.

வங்கதேசம் – 236/9

வங்கதேச அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக தான்சித் ஹாசன் மற்றும் கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ களமிறங்கினர். நிதானமாக விளையாடிய தான்சித் ஹாசன் 24 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். ஒரு புறம் கேப்டன் ஷாண்டோ ரன்கள் குவிக்க, மறுமுனையில் வீரர்கள் தொடர்ந்து விக்கெட்டுகளை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினர். மெஹித் ஹாசன் மிராஸ் 13 ரன்கள், தௌகித் ஹிரிடாய் 7 ரன்கள் மற்றும் முஸ்ஃபிகுர் ரஹிம் 2 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இதையும் படிக்க: விராட் கோலியின் சதத்துக்காக மனித கால்குலேட்டராக மாறிய அக்‌ஷர் படேல்!

இதனையடுத்து, கேப்டன் ஷாண்டோவுடன் ஜேக்கர் அலி ஜோடி சேர்ந்தார். இந்த இணை அணியின் ஸ்கோரை ஓரளவுக்கு உயர்த்தியது. நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ 110 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 9 பவுண்டரிகள் அடங்கும். ஜேக்கர் அலி 55 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். ரிஷாத் ஹொசைன் 26 ரன்களும், டஸ்கின் அகமது 10 ரன்களும் எடுத்தனர்.

இறுதியில் வங்கதேசம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 236 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் மைக்கேல் பிரேஸ்வெல் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். வில்லியம் ஓ’ரூர்க் 2 விக்கெட்டுகளையும், மாட் ஹென்றி மற்றும் கைல் ஜேமிசன் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

சதம் விளாசிய ரச்சின் ரவீந்திரா

237 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி களமிறங்கியது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக வில் யங் மற்றும் டெவான் கான்வே களமிறங்கினர். நியூசிலாந்து அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. வில் யங் ரன் ஏதும் எடுக்காமலும், கேன் வில்லியம்சன் 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து, ரச்சின் ரவீந்திரா மற்றும் டெவான் கான்வே இருவரும் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சிறப்பாக விளையாடியது. இருப்பினும், டெவான் கான்வே 45 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரிகள் அடங்கும்.

இதையும் படிக்க: “கோஹினூர் வைரம்…” விராட் கோலியை பாராட்டிய முன்னாள் இந்திய வீரர்!

இதையடுத்து, ரச்சின் ரவீந்திராவுடன் ஜோடி சேர்ந்தார் டாம் லாதம். டாம் லாதம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த சீரான இடைவெளிகளில் பவுண்டரிகளை விரட்டி ரச்சின் ரவீந்திரா நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிறப்பாக விளையாடிய அவர் அறிமுக சாம்பியன்ஸ் டிராபி போட்டியிலேயே சதம் விளாசி அசத்தினார். அவர் 105 பந்துகளில் 112 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 12 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய டாம் லாதம் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 76 பந்துகளில் 55 ரன்கள் (3 பவுண்டரிகள்) எடுத்து ரன் அவுட் ஆனார். கிளன் பிலிப்ஸ் 21 ரன்கள் எடுத்தார்.

இறுதியில் நியூசிலாந்து அணி 46.1 ஓவர்கள் முடிவில் இலக்கை எட்டி வங்கதேசத்தை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. வங்கதேசம் தரப்பில் டஸ்கின் அகமது, நஹித் ராணா, முஸ்தஃபிசுர் ரஹ்மான் மற்றும் ரிஷாத் ஹொசைன் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் மூலம் குரூப் ஏ பிரிவில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *