வங்கதேசம்: சிறுபான்மையினர் நமது சகோதரர்கள்! தாக்குதல்களுக்கு முகமது யூனுஸ் கண்டனம்

Dinamani2f2024 08 102f5pjbf7re2fpti08 10 2024 000471b.jpg
Spread the love

சிறுபான்மையினர் நமது சகோதரர்கள் எனத் தெரிவித்துள்ள வங்கதேச தலைவர் முகமது யூனுஸ் அவர்களை பாதுகாக்க அந்நாட்டு இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

வங்கதேசத்தில் பிரதமர் பதவியிலிருந்து ஷெக் ஹசீனா கடந்த 5-ஆம் தேதியன்று விலகிய பின், நாடு முழுவதும் 52 மாவட்டங்களில் அங்கு சிறுபான்மையின பிரிவைச் சேர்ந்த ஹிந்து, கிறிஸ்தவ, புத்த மதத்தினரைக் குறிவைத்து குறைந்தபட்சம் 200க்கும் மேற்பட்ட தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறியுள்ளதாகக் கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

அசாதாரண சூழல் நிலவுவதைத் தொடர்ந்து, வங்கதேசத்திலிருந்து ஆயிரக்கணக்கான ஹிந்துக்கள் இந்தியாவுக்குள் நுழைவதற்காக இரு நாட்டு எல்லைப் பகுதிகளில் திரண்டிருப்பதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.

இதையடுத்து, வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பிரதமர் மோடி அந்நாட்டு அரசிடம் வலியுறுத்தியுள்ளாா்.

இந்த நிலையில், வங்கதேசத்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள இடைக்கால அரசுக்கு தலைமை வகிக்கும் முகமது யூனிஸ் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

வங்கதேசத்திலுள்ள அனைத்து ஹிந்து, கிறிஸ்தவ, புத்த குடும்பங்களை பாதுகாக்க வேண்டுமென அவர் மாணவர்களை வலியுறுத்தியுள்ளார். அவர்களும் இந்த நாட்டை சேர்ந்த மக்கள் இல்லையா? என்ற கேள்வியை அவர் மாணவர்கள் மத்தியில் எழுப்பியுள்ளார்.

சனிக்கிழமையன்று(ஆக. 10) ராங்க்பூர் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் முன்னிலையில் அவர் பேசியதாவது, “உங்களால் நாட்டை காப்பாற்ற முடிந்துள்ளது. அப்படியிருக்கையில் சில குடும்பங்களை பாதுகாக்க முடியதா? சிறுபான்மையினர் நமது சகோதரர்கள், அவர்களை (சிறுபான்மையின மக்களை) ஒருத்தர்கூட துன்புறுத்த நீங்கள் அனுமதிக்கக்கூடாது. நாம் இணைந்தே சண்டையிட்டோம், ஒன்றிணைந்தே நிற்போம்!” எனப் பேசி மாணவர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தியுள்ளார்.

டாக்காவில் போராட்டத்தில் ஈடுபட்ட ஹிந்துக்கள்

இதனிடையே வங்கதேசத்தில், ஆயிரக்கணக்கான ஹிந்துக்கள்(மாணவர்கள் உள்பட), சிறுபான்மையினர்களாகிய தங்களின் வீடுகள், கடைகள், கோயில்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள் தாக்கப்படுவதை கண்டித்து தொடர்ந்து 2வது நாளாக இன்றும்(ஆக. 10) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது, ‘ஹிந்துக்களை காப்பாற்றுங்கள்’ என முழக்கமிட்டதை காண முடிந்தது. ஹிந்துக்கள் மீதான தாக்குதல்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் போராட்டம் தொடருமென அவர்கள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், சிறுபான்மையினருக்கென தனி அமைச்சகம் உருவாக்கவும் கோரிக்கை வைத்துள்ளனர். நாடாளுமன்றத்தில் சிறுபான்மையிருக்கான 10 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *