சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீச வங்கதேச கிரிக்கெட் வீரரான ஷகிப் அல் ஹசனுக்கு ஐசிசி தடை விதித்துள்ளது.
வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் சர்வதேச டி 20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வுபெற்ற பின்னர் இங்கிலாந்தில் உள்ள உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்தார். ஆல் ரவுண்டரான இவர் விதிகளை மீறி பந்து வீசியதாக அவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் உள்ளூர் அணியான சர்ரே அணியில் விளையாடிய அவர் பந்து வீசுகையில் விதிகளை மீறியதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தால் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு அவர் பந்து வீசுவதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) விதிகளின்படி சர்வதேச போட்டிகளில் பந்துவீசுவதற்கும் தடை விதிக்கப்பட்டதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | பிரிஸ்பேன் டெஸ்ட்: 4 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாற்றம்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் அங்கீகரிக்கப்பட்ட சோதனை மையத்தின் மதிப்பீட்டைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
விரைவில் ஷகிப் அல் ஹசன் பந்துவீசும் முறை மறுமதிப்பீடு செய்யப்படும் என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
கடந்த 2006 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான இடதுகை ஆட்டக்காரரான ஷகிப் அல் ஹசன் இதுவரை 14,000 ரன்களும் 700 க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். ஆல்ரவுண்டரான இவரது பந்துவீச்சின் மீது குற்றச்சாட்டு வைக்கப்படுவது இதுவே முதல்முறை.
டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவித்த ஷகிப் தனது கடைசி டெஸ்ட் போட்டியை வங்கதேசத்தில் ஆடுவதற்கு விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால், வங்கதேசத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் காரணமாக அந்த போட்டிகள் நடக்கவில்லை. இதனைத் தொடர்ந்து, அவர் அடுத்த ஆண்டு நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட விருப்பம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், சர்வதேச போட்டிகளில் பந்துவீச அவருக்குத் தடை விதிக்கப்பட்டது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.