வங்கதேச அணிக்கு எதிரான தொடர் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்திய அணிக்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் அழைப்பு விடுத்துள்ளது.
இந்தியா – வங்கதேசம் இடையிலான 6 போட்டிகள் கொண்ட டி20, ஒருநாள் தொடர் ஆகஸ்ட் 17 முதல் 31 ஆம் தேதி வரை திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், பல்வேறு காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டது.
வங்கதேசத்துக்கு எதிரான கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்பட்ட நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் டி20, ஒருநாள் தொடரில் விளையாடுவது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் இலங்கை கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்துள்ளது.
இந்தக் கோரிக்கைக்கு இந்திய கிரிக்கெட் வாரியத் தரப்பில் அதிகாரபூர்வமாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. ஒருவேளை நடத்தப்படும்பட்சத்தில் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் களம்காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடர் ஜூலை 31 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. அதே நேரத்தில் வங்கதேசத்துக்கு எதிரான தொடரில் இலங்கை அணி விளையாடி வருகிறது.