தில்லியில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், உள் துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வங்கதேசத்தில் கல்வரம் நீடித்துவரும் நிலையில், அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, ராணுவ ஹெலிகாப்டர் மூலம் தலைநகர் டாக்காவில் இருந்து இந்தியாவுக்கு வந்த நிலையில், இந்த ஆலோசனை நடைபெற்றது.
இதில் வங்கதேசத்தில் நிலவும் பதற்றமான சூழல் உள்ளிட்டவை குறித்து மோடி விவாதித்ததாகத் தெரிகிறது.
வங்கதேசத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீடுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு பிறகு போராட்டம் முடிவுக்கு வந்த நிலையில், ஷேக் ஹசீனா போராட்டக்காரர்களை தீவிரவாதிகள் எனக் குறிப்பிட்டதைத் தொடர்ந்து, மீண்டும் போராட்டம் வெடித்தது.
பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வலியுறுத்தி போராட்டக்காரர்கள், டாக்காவில் உள்ள பிரதமர் இல்லத்தை முற்றுகையிட்டனர். முன்னாள் பிரதமரும் ஷேக் ஹசீனாவின் தந்தையுமான ஷேக் முஜிபுர் ரஹ்மான் சிலையை போராட்டக்காரர்கள் உடைத்தனர். மேலும், உச்சநீதிமன்ற நீதிபதியின் இல்லத்தையும் முற்றுகையிட்டு சூறையாடினர்.
இதனிடையே வங்கதேச பிரதமர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, தலைநகர் டாக்காவில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் ஷேக் ஹசீனா வெளிநாட்டிற்குத் தப்பித்துச் சென்றார். அவர் அங்கிருந்து உத்தரப் பிரதேச மாநிலம் காஸியாபாத்திலுள்ள ஹிண்டன் விமானப்படை தளத்திற்கு வந்து சேர்ந்தார்.