சென்னை: போலி ஆவணங்கள் மூலம் நிலம் அபகரிப்பு, வங்கிக் கடன் பெற்று மோசடி, போலி நகைகளை அடமானம் வைத்து மோசடி உட்பட பல்வேறு வகையான மோசடிகள் தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தினமும் புகார்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் தொடர்புடைய மோசடிக்காரர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்படுகின்றனர். தொடர் விசாரணையில் பெரும்பாலான மோசடி வழக்குகளின் பின்னணியில் ஏதாவது ஒரு வங்கி ஊழியர் அல்லது வங்கி அதிகாரி இருப்பது போலீஸாருக்கு தெரியவந்தது. முன்பு அவர்களை போலீஸார் எச்சரித்து வழக்குப் பதியாமல் அனுப்பிவிடுவார்கள்.
ஆனால், அவர்கள் மீதான பிடியை சென்னை போலீஸார் தற்போது இறுக்கியுள்ளனர். குறிப்பாக மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக இந்த ஆண்டில் மட்டும் 67 வங்கி ஊழியர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 49 வங்கி அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 18 அதிகாரிகளை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க முறைகேட்டில் ஈடுபட்டாலோ, மோசடிக்கு உடந்தையாக இருந்தாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வங்கி ஊழியர் மற்றும் அதிகாரிகள் என்றாலும் பாரபட்சம் காட்டப்படாது என காவல் ஆணையர் அருண் எச்சரித்துள்ளார்.