வங்கி கணக்கில் ரூ.331 கோடி: உறவே இல்லாத திருமணத்திற்கு ரூ.1 கோடி செலவிட்ட ரேபிடோ கார் டிரைவர் | Rs. 331 crore in bank account: Rapido car driver spends Rs. 1 crore on a wedding with no relation

Spread the love

சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் இவ்வகை மோசடிகளுக்கு தங்களது சொந்த வங்கி கணக்கை பயன்படுத்துவதில்லை. அவர்கள் மற்றவர்களின் வங்கி கணக்குகளை பயன்படுத்தி இத்தகைய மோசடிகளில் ஈடுபடுவதுண்டு. சிலர் இவ்வாறான மோசடிகளுக்காக தங்களது வங்கி கணக்கை வாடகைக்கு வழங்குவதும் உள்ளது.

சமீபத்தில், குஜராத்தைச் சேர்ந்த இளம் அரசியல்வாதியான ஆதித்யா ஜுலாவிற்கு ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் ரிசார்ட்டில் ஆடம்பரமாக திருமணம் நடைபெற்றது. இத்திருமணத்துக்கு கோடிக்கணக்கில் பணம் செலவு செய்யப்பட்டது.

இதையடுத்து, இந்த திருமணம் அமலாக்கத்துறையின் பார்வைக்கு வந்தது. திருமணத்திற்கான செலவு எங்கிருந்து வந்தது என்பது குறித்து அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், ஆதித்யாவின் வங்கி கணக்கிலிருந்து பணம் செலவு செய்யவில்லை என்பது தெரியவந்தது.

இதையடுத்து மேற்கொண்டு விசாரித்ததில், ரேபிடோ கார் டிரைவர் சுக்ராமின் வங்கி கணக்கிலிருந்து திருமணத்திற்குத் தேவையான முழு பணமும் செலவு செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.

அதுவும், ரேபிடோ டிரைவரின் வங்கி கணக்கிலிருந்து ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக திருமணத்திற்காக செலவு செய்யப்பட்டிருந்தது.

வங்கி கணக்கில் ரூ.331 கோடி

மணமகன் ஆதித்யாவோ அல்லது மணப்பெண்ணோ எந்த விதத்திலும் தொடர்பில்லாத ரேபிடோ டிரைவரின் வங்கி கணக்கிலிருந்து இவ்வளவு பெரிய தொகை செலவு செய்யப்பட்டிருந்தது.

இது குறித்து மேலும்விசாரித்தபோது, ரேபிடோ டிரைவரின் வங்கி கணக்கில் கடந்த ஒரு ஆண்டில் ரூ.331 கோடி அளவுக்கு தொகை டெபாசிட் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.

மணமகன் ஆதித்யா

மணமகன் ஆதித்யா

பல்வேறு வழிகளில் ரேபிடோ டிரைவரின் வங்கி கணக்கிற்கு வந்த பணம் உடனடியாகவே பிற வங்கி கணக்குகளுக்கு மாற்றப்பட்டிருந்தது.

டிரைவரின் வங்கி கணக்கை ஆதித்யா அவர் அறிவோடு பயன்படுத்துகிறாரா அல்லது டிரைவருக்குத் தெரியாமல் பயன்படுத்துகிறாரா என்பதைக் குறித்து அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். ஆதித்யா காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் ஆவார்.

ரேபிடோ டிரைவரின் வங்கி கணக்கிற்கு வந்த பணம் முழுவதும் சூதாட்டத்திலிருந்தே வந்தது என்று விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

1xBet என்ற சூதாட்ட செயலியில் நடந்த பண பரிவர்த்தனைகளிலிருந்தே இந்தத் தொகை வந்துள்ளதாக கூறப்படுகிறது.

பொதுமக்கள் தங்களது வங்கி கணக்கு விவரங்கள், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்‌பேங்கிங் விவரங்களை அடுத்தவர்களுடன் பகிரக்கூடாது என்று அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல் கையெழுத்திட்ட காசோலைகளை பிறரிடம் கொடுக்கக்கூடாது என்றும், வங்கி கணக்கில் சந்தேகத்துக்கிடமான பரிவர்த்தனைகள் நடந்தால் உடனடியாக புகார் செய்யும்படியும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *