வழக்கமாக ஜப்பானிலுள்ள அமெரிக்க விமானப் படைத் தளமான யொகோடாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் சி-130ஜே சூப்பர் ஹெர்குலஸ் போக்குவரத்து விமானம் அண்மையில், வங்கதேசத்தில் சிட்டகாங்கிலுள்ள ஷா அமானத் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வந்திருக்கிறது.
இந்தியாவின் வடகிழக்குப் பகுதிக்கும் மியான்மருக்கும் அருகில் அமைந்திருக்கும் சிட்டகாங் பகுதிக்கு அமெரிக்க விமானம் வந்து சென்றிருப்பது வங்காள விரிகுடா கடல் பகுதியில் வெளி நாட்டு சக்திகளின் தொடர்பும் செல்வாக்கும் அதிகரித்து வருவதையே காட்டுவதாகக் கருதப்படுகிறது.
மியான்மர் நாட்டில் செயல்பட்டுவரும் தீவிரவாத – அரசு எதிர்ப்புக் குழுக்களைக் கட்டுக்குள் கொண்டுவர அமெரிக்கா, சீனா ஆகிய இரு நாடுகளுமே முயன்றுவருவதாகக் கூறப்படுகிறது.
வங்க தேசத்தில் இளைஞர்களின் கலவரத்துக்குப் பிறகு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து கூட்டு ராணுவ ஒத்திகை போன்றவற்றுக்காக உள்பட அடிக்கடி சிட்டகாங்கிற்கு அமெரிக்க ராணுவம் வந்துசெல்கிறது.
இந்த ஆண்டுத் தொடக்கத்தில் இதே பகுதியில் வங்க தேசமும் அமெரிக்காவும் – ஆபரேஷன் பசிபிக் ஏஞ்சல் -25, டைகர் லைட்னிங் – 2025 என்ற பெயர்களில் – கூட்டு ராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டன.