வங்க மொழியை வங்கதேச மொழி என்பதா? – மத்திய அரசுக்கு ஸ்டாலின் கண்டனம் | A direct insult to the very language in which our National Anthem was written: MK Stalin

1371839
Spread the love

சென்னை: வங்க மொழியை வங்கதேத்தின் மொழி என்று டெல்லி காவல்துறை குறிப்பிட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இதற்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தகுந்த பதிலடி கொடுப்பார் என்றும் கூறியுள்ளார்.

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் ட்வீட்டை மேற்கோள் காட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கப் பதிவில், “ஒன்றிய உள்துறை அமைச்சரவையின்கீழ் இயங்கும் டெல்லி காவல்துறையானது வங்காள மொழியினை ‘வங்கதேச மொழி’ எனக் குறிப்பிட்டிருக்கிறது. இது நம் தேசிய கீதம் இயற்றப்பட்ட வங்க மொழிக்கு இழைக்கப்பட்டுள்ள நேரடி அவமதிப்பாகும்.

இத்தகைய அறிக்கைகள் தெரியாமல் நிகழ்ந்த பிழையோ, தவறோ அல்ல. இந்தியாவின் பன்மைத்துவத்தைத் தொடர்ந்து சிறுமைப்படுத்தி, ஒருவரது அடையாளத்தைக் கொண்டு தாக்கும் ஆட்சியின் கோர மனநிலையையைத்தான் இவை அம்பலப்படுத்துகின்றன.

இந்தி அல்லாத மொழிகளின் மீது இத்தகைய தாக்குதல் தொடுக்கப்படும் நேரத்தில், மேற்கு வங்க மாநிலத்தின் மொழியையும் மக்களையும் காக்கும் அரணாகச் சகோதரி மம்தா பேனர்ஜி திகழ்கிறார். இந்தத் தாக்குதலுக்குத் தக்க பதலடி தராமல் அவர் ஓயமாட்டார்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, டெல்லி லோதி நகர் காவல்நிலையத்தில் இருந்து மேற்குவங்க காவல்துறைக்கு அனுப்பப்பட்ட ஒரு கடிதத்தில், ‘சில ஆவணங்களை வங்கதேச மொழியில் இருந்து மொழிபெயர்த்துள்ளோம்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனை முன்வைத்தே மம்தா தனது எதிர்ப்பை பதிவு செய்திருந்தார், அதை சுட்டிக்காட்டி தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *