உதகை: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து முன்னேற்பாடுகளுடன் தயார் நிலையில் உள்ளதால் பொதுமக்கள் எவ்வித அச்சமும் அடைய வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது: வடகிழக்கு பருவமழை காரணமாக நேற்று முன்தினம் பெய்த கனமழையில் வெலிங்டன் ரவுண்டானா அருகில் சென்று கொண்டிருந்த போது காரின் மீது மரம் விழுந்ததில் ஜாகீர் உசேன் என்பவர் உயிரிழந்தார். குன்னூர், மேல் பாரத் நகரில் வசித்து வரும். ஜெபமாலை மேரி என்பவரன் வீட்டின் இடிந்து விழுந்ததில் ஜெபமாலை மேரிக்கு தலையில் காயம் ஏற்பட்டு குன்னூர் லாலி அரசு மருத்துவ மனையில் முதலுதவி சிகிச்கை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குன்னூர் மற்றும் கோத்தகிரி வட்டங்களில்; 7 வீடுகள் பகுதி சேதமும், 1 வீடு மட்டும் முழு சேதமும் ஏற்பட்டுள்ளது. குந்தா, குன்னூர் மற்றும் கோத்தகிரி வட்டங்களில் மொத்தம் 16 மரங்கள் ஆங்காங்கே சாலையில் விழுந்து உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினரால் மரங்கள் வெட்டி அகற்றப்பட்டு சாலைகள் சீர் செய்யப்பட்டது. குன்னூரிலிருந்து குரும்பாடி சாலை மற்;றும் உழவர்சந்தை ஆகிய இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு நெடுஞ்சாலை துறையினரால் மண்சரிவு அகற்றப்பட்டு சாலை சீர் செய்யப்பட்டது.
கோத்தகிரியிலிருந்து குஞ்சப்பனை செல்லும் சாலையில் ஆங்காங்கே பல இடங்களில் சிறிதளவு மண் சரிவு ஏற்பட்டு நெடுஞ்சாலை துறையினரால் மண்சரிவு அகற்றப்பட்டு சாலை சீர் செய்யப்பட்டது. கோத்தகிரி மற்றும் குன்னூர் வட்டங்களில் மொத்தம் 6 இடங்களில் தடுப்பு சுவர் இடிந்து விழுந்துள்ளது. சம்மபந்தப்பட்ட அலுவலர்களால் சரிசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குன்னூர், கிருஷ்ணபுரம் சாலையில் விரிசல் ஏற்பட்டு நெடுஞ்சாலை துறை மூலம் அதனை சரிசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் 6 வட்டங்களில் மழைக் காலங்களில் அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய 283 பகுதிகள் கண்டறியப்பட்டு, அப்பகுதிகளை கண்காணிக்க 42 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு, அக்குழுக்கள் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவசர காலங்களில் பாதிக்கப்படும் பொதுமக்களை தங்க வைக்க 456 பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன.
மேலும், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் உடனுக்குடன் மேற்கொள்ள வருவாய்த் துறை, உள்ளாட்சித் துறை, காவல் துறை, தீயணைப்புத் துறை, நெடுஞ்சாலைத் துறை, மின்சாரத் துறை, பொதுப்பணித் துறை, மருத்துவம் மற்றும் சுகாதாரப் பணிகள் துறை மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் தயார் நிலையில் உள்ளனர். மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் 3500 முதல் நிலை மீட்பாளர்கள் மற்றும் 200 பேரிடர் கால நண்பர்கள் பேரிடர் பயிற்சி வழங்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர்.
இது தவிர மழை மற்றும் இயற்கை இடர்பாடுகளால் பாதிப்பு ஏற்படும் போது பொதுமக்கள் தகவல் தெரிவிக்க மாவட்ட அவசர கால கட்டுப்பாட்டு அறையில் செயல்படும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 0423-2450034, 2450035–க்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். மேலும், 9943126000 என்ற வாட்ஸ்-அப் எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறே வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் கட்டுப்பாட்டு மையங்கள் செயல்பட்டு வருகிறது. இக்கட்டுப் பாட்டு மையம் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகம் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து முன்னேற்பாடுகளுடன் தயார் நிலையில் உள்ளதால் பொதுமக்கள் எவ்வித அச்சமும் அடைய வேண்டாம்” என்று ஆட்சியர் கூறினார்.