வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயார்: முதல்வர் ஸ்டாலின் | TN ready to meet North East Monsoon rains: CM Stalin

1380323
Spread the love

சென்னை: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்நிலையில் தலைநகர் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அதிகமாக பெய்யும் எனவும், தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் இந்தியா வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (19.10.2025) சென்னை, எழிலகத்திலுள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று, வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மேற்கொண்டுள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக்காட்சி மூலம் ஆய்வு மேற்கொண்டார்.

கடந்த 16.10.2025-அன்று வடகிழக்கு பருவமழை தொடங்கியதன் காரணமாக அக்டோபர் 16, 17 மற்றும் 18 ஆகிய மூன்று நாட்களுக்கு தமிழ்நாட்டில் பரவலான மழை பெய்தது. குறிப்பாக, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், இராமநாதபுரம், தேனி, கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் சராசரியாக 12 மி.மீ. மழை பெறப்பட்டது.

திருவாரூர், தென்காசி, விருதுநகர், இராமநாதபுரம், தேனி, கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள மேற்கொண்டுள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திலிருந்து ஆய்வு மேற்கொண்டு, ஆயத்த நிலை மற்றும் மீட்பு பணிகளை துரிதப்படுத்தவும், கரையோரங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்ல மாவட்ட நிருவாகம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார்.

பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்காக முகாம்களை தயார் நிலையில் வைத்திருக்கவும், முகாம்களில் மக்களுக்கு வழங்கிட உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த முதல்வர் ஸ்டாலின், “வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் அதனை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது. டெல்டா பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்வதால் பயிர்கள் சேதமடைந்து இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் பொய் கூறுகிறார்.

மழையினால் பாதிக்கப்பட்டுள்ள திருவாரூர் மாவட்டத்தில் விவசாயப் பெருங்குடி மக்கள் பாதிக்கப்படாத வகையில், கொள்முதல் பணிகளை தொய்வின்றி நடத்திடவும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பெறப்பட்டுள்ள நெல் மூட்டைகள் விரைவாக கிடங்குகளுக்கு கொண்டுசெல்லும் நடவடிக்கைகளை துரிதப்படுத்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எல்லாம் இரண்டு மாதங்களுக்கு முன்பே எடுக்கப்பட்டுவிட்டது. விருதுநகர், தேனி, ராமநாதபுரம் நீலகிரி மாவட்டங்களில் அதிக மழை பெய்துள்ளது. இருந்தாலும் அங்கு எந்தவொரு அசம்பாவிதமும் ஏற்படவில்லை.” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *