வடகிழக்கு பருவமழை அக்.15-ல் தொடங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு | Northeast Monsoon to begin on October 15 imd predicts

1322290.jpg
Spread the love

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்.15-ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை கேரளாவில் கடந்த ஆக.30-ம் தேதி தொடங்கியது. தொடக்கத்தில் பருவமழை தீவிரமடையவில்லை. ஜூன், ஜூலை மாதங்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் வெகுவாக குறைந்திருந்தது. ஆண்டுதோறும் வழக்கமாக வேளாண் பாசனத்துக்காக ஜூன் 12-ம் தேதி அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு திறக்கப்படவில்லை. இதனால் டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் ஜூலை மாதத்தில் பருவமழை தீவிரமடைந்தது. வடமாநிலங்களில் ஜூலை மாதம்தான் பருவக்காற்று பரவி மழையை கொடுக்கத் தொடங்கியது. டெல்லி, மும்பை, அசாம், நேபாளம், குஜராத் மாநில பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அதிகனமழை கொட்டி தீர்த்தது. ஆகஸ்ட் மாதத்தில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து1 லட்சத்து 70 ஆயிரம் கனஅடிக்கு மேல் சென்றது. மேட்டூர் அணை நிரம்பி, உபரிநீர் திறக்கப்பட்டு, காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

தென்மேற்கு பருவமழை விலகாமல் இருந்தாலும் ஜூன் 1 முதல் செப்.30-ம் தேதி வரை தென்மேற்கு பருவமழை காலமாக இந்திய வானிலை ஆய்வு மையம் வரையறை செய்துள்ளது. இந்த ஆண்டு இன்னும் தென்மேற்கு பருவமழை விலகவில்லை. தேசியஅளவில் மேற்கூறிய 4 மாதங்களில் தென் மாநிலங்களில் வழக்கத்தைவிட 14% அதிகமாக மழை பெய்துள்ளது.

இந்நிலையில், அடுத்த 15 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: தற்போதைய நிலவரப்படி, ஜம்மு காஷ்மீர், இமாச்சல பிரதேசம், உத்தராகண்ட், ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் பருவமழை விலகியுள்ளது. குஜராத், உத்தர பிரதேசம், மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்டமாநிலங்களின் பல பகுதிகளில் பருவமழை விலகியுள்ளது. அடுத்த 2 நாட்களுக்குள் முழுமையாக விலக வாய்ப்புள்ளது. இதர மாநிலங்களில் அக்டோபர் 2-வது வாரத்துக்குள் தென்மேற்கு பருவமழை முழுமையாக விலகக்கூடும். அதனைத் தொடர்ந்து அக்.15-ம் தேதி வாக்கில் வடகிழக்கு பருவமழை தொடங்கவாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.

17 மாவட்டங்களில் இன்று மழை: இதற்கிடையே, ஆந்திர கடலோரப் பகுதிகளையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டலகீழடுக்கு சுழற்சி காரணமாக இன்றுமுதல் (ஆக.6) வரும் 11-ம் தேதிவரை தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடியுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கரூர், திருச்சி, மதுரை, விருதுநகர், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை மேற்கூறிய மாவட்டங்கள் (தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் நீங்கலாக) மற்றும் பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும்.

வரும் 8-ம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், நாமக்கல், கரூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களிலும், 9-ம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும், 10-ம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *