சென்னை: வட கிழக்கு பருவமழை தொடங்கும் முன்னதாகவே, அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளில் முதல் நிலை மீட்பர்கள், மாநில பேரிடர் மீட்புப் படைகளை நிலை நிறுத்தி, தயார் நிலையில் வைக்க வேண்டும் என்று சென்னை உட்பட 4 மாவட்ட அதிகாரிகளுக்கு தலைமைச் செயலர் நா.முருகானந்தம் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்துக்கு வரும் அக்டோபர் முதல் டிசம்பர் வரையில் வடகிழக்கு பருவமழைக் காலமாகும். இந்த காலகட்டத்தில், அதிகளவு மழையை தமிழகத்தின் வட பகுதிகளான சென்னை மாநகராட்சி, தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சிகள் மற்றும் திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்கள் பெறுகின்றன. இப்பகுதிகளில் வடகிழக்கு பருவமழைக்கான பேரிடர் ஆயத்தப் பணிகள் தொடர்பாக தலைமைச்செயலகத்தில், தலைமைச்செயலர் நா.முருகானந்தம் தலைமையில், தொடர்புடைய அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது.
கூட்டத்தில், மாநகராட்சி ஆணையர்கள் பருவமழையின் சவால்கள், எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள பேரிடர் ஆயத்த நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தனர். மேலும், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களிடம் தலைமைச் செயலர் கேட்டறிந்தார்.
தொடர்ந்து, பருவமலை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக பல்வேறு துறைகளின் செயலர்கள், காவல்துறை, தீயணைப்புத்துறை அதிகாரிகள் விளக்கினர்.இதையடுத்து, தலைமைச் செயலர் வெளியிட்ட அறிவுறுத்தல்கள்: “சென்னை, ஆவடி, தாம்பரம் மாநகராட்சி ஆணையர்கள், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆட்சியர்கள், மண்டல அளவிலான ஒருங்கிணைப்பு கூட்டங்களை நடத்தி, ஒவ்வொருவருக்குமான பேரிடர் மேலாண்மை பணிகளை வகுக்க வேண்டும். குடியிருப்போர் நலச்சங்கங்களுக்கான விழிப்புணர்வு மற்றும் பேரிடர் ஆயத்தம் குறித்த கூட்டம் நடத்த வேண்டும். சென்னை வடிநில பகுதியில் நெடுஞ்சாலை, நீர்வளத்துறை, சென்னை மாநகராட்சி, மெட்ரோ ரயில் ஆகிய துறைகளின் பணிகளின் தரம், முன்னேற்றம் குறித்து கள ஆய்வு செய்ய வேண்டும்.
இந்த பகுதிகளில் நடைப்பெற்று வரும் பேரிடர் தணிப்பு பணிகளை அக்.15-க்குள் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். வருவாய், காவல், மீன்வளத்துறையின் அனைத்து முதல் நிலை மீட்பாளர்களின் பட்டியல் சரிபார்க்கப்பட்டு, தயார் நிலையில் இருக்கச்செய்ய வேண்டும். பேரிடர் மீட்பு உபகரணங்கள், வாகனங்கள், நீர் இறைப்பான்கள், படகுகள் பருவ மழை தொடங்கும் முன்னரே பாதிப்புகளுக்கு உள்ளாகும் தாழ்வான பகுதிகளில் நிலை நிறுத்தப்பட வேண்டும்.
பருவ மழை தொடங்கும் முன்னரே, மாநிலத்தின் அதிக பாதிப்புகளுக்குள்ளாகும் பகுதிகளில் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையினை நிலை நிறுத்த வேண்டும். அனைத்து வானிலை வல்லுநர்கள் மற்றும் ஆர்வலர்களின் முன்னெச்சரிக்கைகளின் அடிப்படையில், பொதுமக்களுக்கு எளிதில் புரியும் வகையிலான, பகுதிவாரியான வானிலை தகவல்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அறிவுறுத்தினார்.