வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள்: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை | Northeast Monsoon Preparations Chief Minister Stalin reviews with District Collectors

1380434
Spread the love

சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதையடுத்து மேற்கொண்டுள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்தும், டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் குறித்தும், தமிழக முதல்வர் ஸ்டாலின் மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக ஆய்வு நடத்தினார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘ தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று (21.10.2025) தலைமைச் செயலகத்தில், வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதையடுத்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களிலும் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக ஆய்வு மேற்கொண்டார்.

கடந்த 16.10.2025-அன்று வடகிழக்கு பருவமழை தொடங்கியதன் காரணமாக அக்டோபர் 16, 17 மற்றும் 18 ஆகிய மூன்று நாட்களுக்கு தமிழ்நாட்டில் பரவலான மழை பெய்தது. குறிப்பாக, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், இராமநாதபுரம், தேனி, கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் சராசரியாக 12 மி.மீ. மழை பெறப்பட்டது.

அதனையொட்டி, திருவாரூர், தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள மேற்கொண்டுள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் 19.10.2025 அன்று சென்னை, எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திலிருந்து ஆய்வு மேற்கொண்டு, முன்னேற்பாடு பணிகளை துரிதப்படுத்தவும், கரையோரங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லவும் மாவட்ட நிருவாகம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ள தமிழக முதல்வர் அறிவுறுத்தினார்.

அதன் தொடர்ச்சியாக, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மற்றும் டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மேற்கொண்டுள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக இன்றைய தினம் ஆய்வு மேற்கொண்டு, கரையோரங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லவும், நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும் மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார். மேற்காணும் மாவட்டங்களில் சராசரியாக 56.61 மி.மீ மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இக்கூட்டத்தில், மழையால் பாதிப்பு ஏற்பட்டால் மக்கள் தங்குவதற்காக முகாம்களை தயார் நிலையில் வைத்திருக்கவும், முகாம்களில் மக்களுக்கு வழங்கிட உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்திட வேண்டும் என்றும் முதல்வர் அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து, வடகிழக்கு பருவமழையையொட்டி சென்னையில் மேற்கொண்டு வரும் முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்தும், மழைநீர் தேங்கும் பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்துமாறும் அலுவலர்களை கேட்டுக்கொண்டார்.

திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மற்றும் டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் மழையினால் ஏற்படும் பாதிப்புகளை சீர்செய்திட ஜேசிபி இயந்திரங்கள், படகுகள், மோட்டார் பம்புகள், மரஅறுப்பான்கள், லாரிகள் மற்றும் 51,639 மின் கம்பங்கள், 1849 மின் மாற்றிகள், 1187 மின் கடத்திகள் போன்ற தேவையான அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாக முதல்வரிடம் தெரிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்தின்போது, நெல் கொள்முதல் சேமிப்பு, நகர்வு மற்றும் அரவை குறித்தும் முதல்வர் ஆய்வு மேற்கொண்டார், இந்த ஆய்வின் போது, மழையால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்ட விவசாய பெருங்குடி மக்கள் பாதிக்கப்படாத வகையில் நெல் கொள்முதல் பணிகளை தொய்வின்றி நடத்திட வேண்டும் என்றும், மழையால் நெல் மூட்டைகள் சேதம் அடையாமல் பாதுகாத்திட வேண்டும் என்றும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பெறப்பட்டுள்ள நெல் மூட்டைகளை கிடங்குகளுக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகளை துரிதப்படுத்திட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

மேலும், 19.10.2025 அன்று ஈரப்பத அளவை 17 சதவிகிதத்திலிருந்து 22 சதவிகிதமாக தளர்வு வழங்குமாறு தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசிற்கு முன்மொழிவு அனுப்பியுள்ளதை சுட்டிக்காட்டி, இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அலுவலர்களை அறிவுறுத்தினார்.

சென்னை பெருநகரத்தை பொறுத்தவரை பெருநகர சென்னை மாநகராட்சி வாயிலாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கினால் மோட்டார் பம்புகள் மற்றும் இயந்திரங்கள் கொண்டு அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்படும் மின் கம்பங்களை சீர் செய்திட நடவடிக்கை எடுத்து, சீரான மின்சாரம் வழங்குவதை உறுதி செய்திட வேண்டும் என்றும், பெருநகர சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையில் மழை தொடர்பாக பெறப்படும் புகார்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அலுவலர்களை அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் முருகானந்தம், வருவாய் நிர்வாக ஆணையர்/ கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் எம்.சாய்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சமூகவலைதளப் பதிவில், “திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையை எதிர்கொள்வது குறித்து, இன்றும் காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினேன்.

பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும், நெல் கொள்முதல் பணிகளைத் தொய்வின்றி மேற்கொள்ளவும் உத்தரவிட்டு, எடுக்கப்பட்டுள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்துக் கேட்டறிந்தேன். மக்கள் பிரதிநிதிகளும், ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதிகாரிகள் நியமனம்: இந்த ஆய்விற்குப் பிறகு, இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தினால் ஆரஞ்சு / சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, அரியலூர் ஆகிய மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அதிகாரிகளை (Monitoring Officers) தத்தமது மாவட்டங்களுக்கு உடனடியாக சென்று அங்கு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து, ஆய்வு செய்யுமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *