வடக்கு கலிபோர்னியாவில் ஏற்பட்ட புயலால் கனமழை, கடும் பனிப்பொழிவால் மக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர்.
வடக்கு கலிபோர்னியாவை ஒரு மிகப்பெரிய புயல் தாக்கியதில் கடுமையான பனிப்பொழிவு மற்றும் கனமழை பெய்தது. சில பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டதில் 2 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், வடமேற்கு பசிபிக்கில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.
வானிலை ஆய்வாளர்கள் திடீர் வெள்ளம், மண்சரிவுகள் ஏற்படும் என்று எச்சரித்ததைத் தொடர்ந்து, சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
வாஷிங்டனில், 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில், சியாட்டில் பகுதியில் மின் கம்பங்கள் மீது மரக்கிளைகள் விழுந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை தொடங்கிய மின்தடை சனிக்கிழமை வரை நீடிக்கும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தென்மேற்கு ஓரிகான் மற்றும் கலிபோர்னியாவின் வடக்கு மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை வரை சுமார் 41 சென்டிமீட்டர் வரை மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சான்டா ரோசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16.5 சென்டிமீட்டர் வரை மழை பெய்துள்ளது.
சியாட்டில் பகுதியில் புதன்கிழமை 10-க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டன. சான் பிரான்சிஸ்கோ சர்வதேச விமான நிலையத்தில் வியாழக்கிழமை அன்று சுமார் 550 விமானங்கள் தாமதமாக புறப்பட்டன. மேலும், 10-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. கலிபோர்னியாவில், 8,000-க்கும் மேற்பட்ட இடங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.