கடலூர்: வடலூர் சத்திய ஞான சபையில் நடைபெறவுள்ள, தைப்பூச அன்னதானத்திற்கு கடலூர் இஸ்லாமிய பிரமுகர் ஒருவர் டன் கணக்கில் காய்கறிகள் மற்றும் பல்வேறு வகையான பொருட்களை அனுப்பி வைத்தார்.
வடலூரில் வள்ளலாரின் 154 வது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழாவை ஒட்டி, கடலூர் மாவட்ட சிறுபான்மை மக்கள் நல குழுவின் மாவட்ட தலைவரும், காய்கறி கடை உரிமையாளருமான எஸ்.கே. பக்கீரான் 25 டன் காய்கறிகள், ஐந்தாயிரம் தண்ணீர் பாட்டில்கள், 100 மூட்டை அரிசி உள்ளிட்டவைகளை வள்ளலார் சபைக்கு அனுப்பி வைத்தார்.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பக்கீரான். இஸ்லாமியரான இவர் கடலூரில் காய்கறி கடை வைத்துள்ளார். இவர் கடந்த 19 ஆண்டுகளாக வடலூர் தைப்பூசத்திற்கு வள்ளலார் சபைக்கு காய்கறி அரிசி உள்ளிட்ட பொருட்களை அனுப்பி வைத்து வருகிறார். இந்த நிலையில் இன்று (பிப்.10) இந்த ஆண்டுக்கான பொருட்கள் அனுப்பும் நிகழ்ச்சி கடலூரில் நடைபெற்றது.
25 டன் பல்வேறு காய்கறிகள், 2,600 கிலோ அரிசி, ஐந்தாயிரம் தண்ணீர் பாட்டில்கள் இரண்டு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் கடலூர் மாநகரத் தலைவர் தொழிலதிபர் ஜி. ஆர்.துரைராஜ் தலைமை தாங்கினார்.
வியாபாரிகள் சங்கத்தின் மண்டல தலைவர் டி.சண்முகம், திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநகர செயலாளர் கே எஸ் ராஜா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கோ. மாதவன், மக்கள் ஒற்றுமை மேடையின் மாவட்ட அமைப்பாளர் ஆர்.அமர்நாத், சிஐடியு மாவட்ட செயலாளர் டி.பழனிவேல், வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் மருத்துவர் சதீஷ்குமார், யுவராஜ், ஏ.வி.சதீஷ், ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த பொருள்கள் அனைத்தும் வடலூரில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் வள்ளலார் தெய்வ நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. நாளை (பிப்.11) சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசன விழா நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.