வட்டியில்லா கல்விக் கடன் வழங்க நிர்மலா சீதாராமனிடம் காங். எம்.பி விஜய் வசந்த் நேரில் கோரிக்கை | Vijay vasanth meet Nirmala Sitharaman to Request for interest free loan to students

1291290.jpg
Spread the love

புதுடெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் இன்று நேரில் சந்தித்தார். அப்போது அவர், மாணவர்களுக்கு வட்டியில்லா கல்விக் கடன் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தார்.

நிர்மலா சீதாராமனை சந்தித்து விஜய் வசந்த் அளித்த மனுவின் விவரம்: “ஜிஎஸ்டி வரி, வங்கி கடன்கள் மற்றும் விலைவாசி உயர்வால் தவிக்கும் மக்களின் நலன் கருதி சில கோரிக்கைகளை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். விவசாயிகள், மீனவர்கள் மற்றும் நடுத்தர மக்களை பாதிக்கும் விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டு வரவேண்டும். இதற்காக, பல அத்தியாவசிய பொருட்களின் வரியினை மத்திய அரசு குறைக்க வேண்டும்.

கல்வி செலவு பெருகி வரும் சூழ்நிலையில் பல ஏழை மாணவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் வங்கிகளிலிருந்து கல்விக் கடன் பெற்று தங்கள் கல்வியை தொடர்கின்றனர். ஆனால், வட்டியுடன் கூடிய இந்த கல்வி கடனை அடைப்பதற்கு மாணவர்கள் மற்றும் அவர்கள் பெற்றோர் சிரமப்படுகின்றனர். ஆகையால், அரசு மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வட்டியில்லா கல்வி கடன் வழங்க முன்வர வேண்டும்.

அது போன்று கல்வி உபகரணங்கள் மற்றும் கல்வி சேவை மீதான ஜி.எஸ்.டி வரியை குறைப்பதன் மூலம் அது மாணவர்களின் கல்வி செலவு குறைய ஏதுவாகும்.மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அவர்கள் பயன்படுத்தும் உபகரணங்கள் மீதான வரியை குறைப்பது அவர்களுக்கு அரசு செய்யும் மிகப் பெரிய உதவியாக இருக்கும்.ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் விலைவாசி உயர்வினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்தியாவசிய பொருட்கள் மீதான வரியை குறைத்து விலைவாசியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அரசு ஆவன செய்ய வேண்டும். சிறு குறு தொழில் முனைவோர்களின் பொருளாதார சுமையை குறைக்கும் வகையில் ஜி.எஸ்.டி சேவையை எளிமையாக்க வேண்டும்” என அவர் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *