காற்று மாசு எனும் மிகப்பெரிய பேரிடரால், தலைநகர் தில்லி மற்றும் அதன் அண்டை மாநிலங்கள் மூச்சுத்திணறிக்கொண்டிருக்கும் நிலையில், விண்வெளியிலிருந்தும், இந்த காற்று மாசு தெரிகிறது என்பது அதிர்ச்சியை அளிக்கிறது.
தலைநகர் உள்பட வட இந்தியாவின் ஒரு பெரிய பகுதி முழுவதும் கடுமையான காற்று மாசுபாட்டால் சூழப்பட்டுள்ளது, ஒவ்வொரு நிமிடமும் அதிகரித்துக்கொண்டே இருக்கும் இந்த அபாயகரமான காற்று மாசுபாட்டுக்கு லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காற்று மாசுபாட்டுடன் புகைமூட்டம் பார்க்கும் திறனை வெகுவாகக் குறைத்து, மாசுபட்டக் காற்றை சுவாசிப்பதால் உடல்நிலை மோசமடைந்து, மக்கள் சுவாசிக்கக் கூட முடியாமல் சிரமப்படுகின்றனர்.
தலைநகர் தில்லி, குருகிராம், நொய்டா மற்றும் காசியாபாத் போன்ற முக்கிய நகரங்களில் காற்றுத் தரக் குறியீடு (ஏக்யூஐ) அளவுகள் “கடுமையான” பிரிவில் இருக்கின்றன. இது உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்த பாதுகாப்பான வரம்புகளை விட மிக மிக அதிகம்.