வண்டலூர் உயிரியியல் பூங்காவில் சோகம்: சர்க்கரை நோயால் பெண் மனித குரங்கு உயிரிழப்பு  – Kumudam

Spread the love

சென்னை புறநகர் பகுதியான செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, தெற்காசியாவிலேயே மிகப்பெரிய உயிரியல் பூங்காக்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது. 

சுமார் 1,490 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தப் பூங்கா, இயற்கையான காப்புக்காடு சூழலில் 180-க்கும் மேற்பட்ட விலங்கு இனங்களையும், 2,500-க்கும் அதிகமான விலங்குகளையும் பராமரித்து வருகிறது.. குறிப்பாக, இங்குள்ள சிங்கங்கள் உலாவும் லயன் சஃபாரி மற்றும் மான் சஃபாரி ஆகியவை சுற்றுலாப் பயணிகளிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்ற இடங்களாகும்.

சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த சஃபாரி பகுதிகளில், பிரத்யேக வாகனங்கள் மூலம் விலங்குகளை அவற்றின் இயற்கையான வாழ்விடத்திலேயே நேரில் காணும் வசதி உள்ளது.உயிரியியல் பூங்காவிற்கு கடந்த 2005ம் ஆண்டு சிங்கப்பூரிலிருந்து கோம்பி (32) என்ற ஆண் மனித குரங்கும், இதன் ஜோடியான கவுரி (33) என்ற பெண் மனித குரங்கும் கொண்டுவரப்பட்டன. 

இவை இரண்டும் சேர்த்து இனப்பெருக்கம் செய்ததில் ஆதித்யா (4) என்ற ஆண் மனித குரங்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தது. இந்த நிலையில், பெண் மனித குரங்குக்கு கடந்த ஒரு ஆண்டாக சர்க்கரை நோய் இருந்து வந்தது. இதற்காக பெண் குரங்கிற்கு தினந்தோறும் சிகிச்சை அளித்ததோடு, தீவிரமாக கண்காணித்து வந்தனர். 

நேற்றைய தினம் வழக்கம்போல் காலை குரங்குகள் பராமரிப்பு கூண்டுக்கு சென்ற பராமரிப்பாளர் பெண் மனித குரங்கு இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் பூங்கா அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். இதை தொடர்ந்து, பெண் மனித குரங்கை பூங்கா மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து மின் மயானத்தில் தகனம் செய்தனர். 

 

பிரேத பரிசோதனையில் பெண் மனித குரங்கு நேற்று முன்தினம் இரவு சர்க்கரை அளவு அதிகரித்து உயிரிழந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து வண்டலூர் பூங்காவில் மற்ற விலங்குகளும் தீவிரமாக கண்காணிக்கபட்டு வருகின்றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *